/tamil-ie/media/media_files/uploads/2023/03/simbu-2.jpg)
சென்னையில், உள்ள ரோகிணி தியேட்டரில் நரி குறிவர் மக்களை படம் பார்க்க அனுமதிக்காதது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தியேட்டர் நிர்வாகம் கொடுத்த விளக்கத்தை எதிர்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் ‘ பத்து தல’ திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் ’பத்து தல’ திரைப்படம் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்டது. இந்த படத்தை காண நரிகுறவர் சமூகத்தை சேர்ந்த பெண் மற்றும் அவரது 10 வயது குழந்தையும் திரையரங்கம் வந்தனர். டிக்கெட்டை பரிசோதனை செய்யும் இடத்தில், இருந்த பணியாளர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் இருவரும் டிக்கெட் எடுத்திருந்தபோதும், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீவி பிரகாஷ் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். “ அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்தது. இதில் ‘பத்து தல’ திரைப்படம் யு/ஏ சென்சார் பெற்றது. இதனால் குழந்தைகளுடன் வந்த அவர்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் யு/ஏ சென்சார் என்றால் பெற்றோரோடு குழந்தைகள் திரைப்படம் பார்க்கலாம் என்றும் இதுபோல வினோதமான விளக்கத்தை எப்படி தியேட்டர் நிர்வாகம் கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நரிகுறவர் மக்களிடம் கேட்டப்போது இது தொடர்ந்து நடப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்பு வெளியான அஜித் மற்றும் விஜய் திரைப்படத்திற்கு, நாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.