Cooku with Comali Pavithra Lakshmi Tami News : சமையலோடு நகைச்சுவையையும் கலந்து கொடுத்து சூப்பர்ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி ஷோ, குக்கு வித் கோமாளி. கடந்த சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இரண்டாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. சென்ற சீசனைவிட இந்த சீசனில் தர்ஷா, அஷ்வின் என இளசுகளின் வருகை அதிகமாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து, வைரல் ஸ்டாராக உருவாகி வருகிறார் பவித்ரா லக்ஷ்மி.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கெனவே இளைஞர்களின் மத்தியில் ட்ரெண்ட் செட் செய்தவர்தான். ‘ஹெலோ சீனியர்’ என்ற வாக்கியம்தான் அந்த ட்ரெண்ட் மார்க். ஆம், இதே குக்கு வித் கோமாளி 2-வில் இன்னொரு போட்டியாளராக இருக்கும் அஷ்வினோடு இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘3 சீன்ஸ் ஆஃப் ஹிஸ் லவ் ஸ்டோரி (3 Scenes of his Love story)’ என்கிற வைரல் குறும்படத்தில் நடித்தவர்தான் இந்த பவித்ரா.

இவர் நடிகை மட்டுமல்ல. ஃபேஷன் டிசைனர், மாடல், டான்சர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். ஒரு பெரிய நடனக்கலைஞராக உருவாக்க வேண்டுமென விரும்பிய பவித்ராவின் தாய், அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே நடன பயிற்சிக்கு அனுப்பிவிட்டாராம். தன்னை ஒரு மாடல், நடிகை என்று சொல்வதைவிட, ‘டான்சர்’ என்று சொல்லுவதுதான் பவித்ராவுக்கு மிகவும் பிடிக்குமாம்!
இதனைத் தொடர்ந்து 2010-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவருக்குச் சென்னை புதிதென்பதால், ஆரம்பத்தில் ஏராளமான தடுமாற்றங்களைச் சந்தித்திருக்கிறார். இதுவே, அந்த நிகழ்ச்சியில் டாப் 20 வரை வந்தாலும், பயம் மற்றும் பதற்றம் காரணமாக தன் சொந்த ஊருக்கே சென்றிருக்கிறார்.

ஆனால், மனம் தளராத பவித்ரா மீண்டும் முயற்சி செய்து ‘மானாட மயிலாட’ பத்தாம் சீசனில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 2014-ம் ஆண்டு ‘ஃபேஸ் ஆஃப் சென்னை’, 2015-ம் ஆண்டு ‘மிஸ் மெட்ராஸ்’, 2017-ம் ஆண்டு ‘குயின் ஆஃப் மெட்ராஸ்’ உள்ளிட்ட டைட்டில்களை அள்ளி சென்றிருக்கிறார்.
போன சீசனில் ரம்யா பாண்டியனோடு இணைந்து ஷோவை வேற லெவலுக்கு எடுத்துச் சென்ற ‘கோமாளி’ புகழ், இந்த சீசனில் டார்கெட் செய்திருப்பது பவித்ராவைதான். இதனாலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகியிருக்கின்றன. சோஷியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருக்கும் பவித்ரா, அவ்வப்போது அழகு குறிப்புகளையும் பகிர்ந்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”