ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டுள்ள கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என் ரவி உரை உடன் நேற்று (பிப்.13) தொடங்கியது. சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்ற ஆளுநர், தனது உரையை முழுமையாக படிக்காமல் 4 நிமிடத்திலேயே முடித்தார்.
"நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், முடிவிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும். நான் பலமுறை அதை கூறியும் ஏற்கவில்லை. ஆளுநர் உரையில் இருக்கும் கருத்துகளை உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறி கூட்டத் தொடரில் இருந்து வெளியேறினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவையின் மாண்பை ஆளுநர் மீறிவிட்டதாக ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மன்னிக்கவும், ஆளுநர்ஆர்.என்.ரவி சார். நீங்கள் நடந்து கொண்டவிதம் ஏற்புடையதல்ல; பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்?" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“