2.0, பேட்ட… படையெடுக்கும் பாலிவுட் வில்லன்கள்

Bollywood Villains in Tamil Cinema: ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பும் எளிதில் கிடைக்கிறது.

By: January 29, 2019, 7:07:10 PM

சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோவுக்கு இருக்கும் முக்கியத்துவம் சற்றும் குறையாமல் வில்லனின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்படும். சில வில்லன்கள் அபார நடிப்பால், ஹீரோவை ஓரம் கட்டி விட்டு ‘அப்ளாஸ்’ அள்ளுவார்கள்.

சமீப நாட்களாக தமிழ் சினிமாவில் பாலிவுட் வில்லன்களின் வருகை அதிகரித்து வருவதை நாம் அறிவோம். ஹீரோ பக்கத்து வீட்டு பையன் தோற்றத்தில் இருந்தாலும், அவருக்கு வில்லன் மட்டும், படு ஸ்டைலிஷாக இருப்பார்.

2017-ல் நடிகர் அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். அதற்கு முன்பே தன்னுடைய வில்லன்களை பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டார் நடிகர் விஜய். 2012-ல் துப்பாக்கி படத்தில் வித்யுத் ஜம்வால், 2014-ல் வெளியான கத்தியில் நீல் திதின் முகேஷ் என அடுத்தடுத்து வட இந்திய வில்லன்களுடன் சண்டைப் போட்ட விஜய், மெர்சலிலும் (2017), சர்காரிலும் (2018) லோக்கல் வில்லன் / வில்லியுடன் மல்லுக்கட்டினார்.

இந்நிலையில் மீண்டும் விஜய்யின் பார்வை பாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. இயக்குநர் அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் நடிப்பதாக செய்திகள் வலம் வருகின்றன.

வட இந்திய நடிகைகள் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற காலம் போய், தற்போது பாலிவுட் நடிகர்கள் / வில்லன்கள் இங்கே தென்னிந்திய சினிமாக்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி, சின்னத்தம்பி, சந்திரமுகி உட்பட பல ப்ளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த இயக்குநர் பி.வாசு, “நம்ம ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ஒரு வட இந்திய நடிகர் கூட சண்டை போடுறத ரசிப்பாங்க. அதனால தான் நான் சந்திரமுகி படத்துல, இந்தி நடிகர் சோனு சூத்தை ஒரு சண்டைக் காட்சியில நடிக்க வச்சேன். இதுவும் அந்த படத்தோட வெற்றிக்கு ஒரு காரணம். எம்.ஜி.ஆர் காலத்து படங்களில் ஹீரோ ஒரு அதி பலசாலி வில்லன் கூட மோதுவதாகத் தான் பெரும்பாலான படங்கள் இருக்கும்” என்றார்.

பாலிவுட்டில் கோலிவுட் வில்லன்களை தேடுவது தற்போது டிரெண்டாகியுள்ளது. மணி ரத்னம் – ரஜினி கூட்டணியில் உருவான ‘தளபதி’ படத்தில் பாலிவுட் நடிகர் அம்ரீஷ் புரி கலிவர்தன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

‘எந்திரனில்’ ஹீரோ, வில்லன் என இரண்டையுமே ரஜினி ஏற்று நடித்திருந்தார். ஆனால் அதன் அடுத்த பாகமான ‘2.0’-வில் அக்‌ஷய் குமாரை பக்‌ஷி ராஜன் என்ற வில்லனாக கோலிவுட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் ரஜினியும் அக்‌ஷய்யும் மோதிக் கொள்ளும் க்ளைமேக்ஸ் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்தன. தமிழகத்தில் சரிந்தாலும் மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் அபார வெற்றி பெற்று பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டானது இந்த ‘2.0’.

சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்திலும் ‘சிங்கார் சிங்’ என்ற கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமலை வைத்து ‘இந்தியன் – 2’ படத்தை இயக்கும் ஷங்கர், மீண்டும் அக்‌ஷய் குமாரை வில்லனாக தேர்வு செய்துள்ளாராம். இந்தப் படத்தில் முதன்மையான வில்லனாக அக்‌ஷய் குமாரும், இரண்டாவது வில்லனாக அபிஷேக் பச்சனும் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

பாலிவுட் வில்லன்களுக்கு குரல் கொடுக்க, தமிழில் நிறைய ஆப்ஷன்கள் (ஆர்டிஸ்டுகள்) உள்ளதும் இதற்குக் காரணம். ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் சைக்கோ கொலையாளியாக பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப் நடித்திருப்பார். இதன் இயக்குநர் அஜய் ஞானமுத்து, “தொடர் கொலைகாரன் என்பதை யோசித்ததுமே அனுராக் தான் என் மனதில் தோன்றினார். அவரை தொடர்புக் கொண்டு முழுக் கதையையும் சொன்னேன். அவருக்கும் பிடித்துப்போய் நடிக்க சம்மதித்தார். இயக்குநரும் என் நண்பருமான மகிழ் திருமேனி அனுராக்கிற்கு குரல் கொடுத்தார். அவரே பேசியது போல், அத்தனை கச்சிதமாக பொருந்திப் போனது” என்றார்.

தவிர, பாலிவுட் வில்லன்களை கோலிவுட் வரவேற்பதற்கு முக்கியக் காரணம், கதைக்கு வலு சேர்க்கும் வகையில் அவர்களிடம் சற்று கூடுதலான சர்ப்ரைஸ் எலிமெண்டுகள் இருப்பது தான் எனத் தொடங்கிய பிரபல இயக்குநர் ஒருவர், “பெரும்பாலான கமர்ஷியல் மற்றும் மசாலா படங்களில் வில்லன் கதாபாத்திரம் மோசமாக வடிவமைக்கப்பட்டு குணச்சித்திர நடிகர்களுக்கு வழங்கப்பட்டு மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போடும்.

உதாரணமாக நடிகர் பிரகாஷ் ராஜ் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது அவர் என்ன செய்வார், அவரது உடல் மொழி, முகபாவனைகள் எப்படி இருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆக, ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் கோலிவுட் இயக்குநர்கள் இருப்பதால் தான் பாலிவுட்டை நோக்கி படையெடுக்க வேண்டியுள்ளது” என்றார்.

வெயிட்டான சம்பளம் கிடைப்பதால் பாலிவுட் நடிகர்களும் கோலிவுட்டில் வில்லனாக நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சராசரியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட இரண்டிலிருந்து மூன்று மடங்கு பணம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் அவர்கள் டப்பிங் செய்யத் தேவையில்லை. அதோடு ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பும் எளிதில் கிடைக்கிறது.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட பாலிவுட் நடிகருக்கு இருக்கும் ரசிகர் பலத்தை வைத்து, இயக்குநரும் தயாரிப்பாளரும் அவரை தங்களது படத்தில் வில்லனாக ’டிக்’ செய்து விடுகிறார்கள்.

தற்போது பாலிவுட் நடிகர் பொம்மன் இரானி, சூர்யா – கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தங்களுக்கான மிகப்பெரும் மார்க்கெட்டுக்காக பாலிவுட் வில்லன்களை தமிழ் இயக்குநர்கள் தங்கள் படங்களில் ’கமிட்’ செய்வதும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.

எதிர்பார்ப்போம் இன்னும் பல பாலிவுட் வில்லன்களை!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Petta 2 0 bollywood villains in tamil cinema

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X