Petta Movie Review in Tamil : ரஜினி, சிம்ரன், த்ரிஷா போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் பொங்கலுக்காக திரைக்கு வந்துள்ளது பேட்ட படம். காளியாக ரசிகர்களின் மனதை வென்றாரா ரஜினி ?
நடிகர்கள் : ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிக்குமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், முனீஸ் காந்த், நவாஸூதின் சித்திக், இயக்குநர் மகேந்திரன், மாளவிகா மோகனன்
இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் : கலாநிதி மாறன்
ஒளிப்பதிவு : திருநாவுக்கரசு
கலை : சுரேஷ் செல்வராஜன்
முதலில் கார்த்திக் சுப்புராஜிற்கு மிகப் பெரிய பாராட்டுகளை கூற வேண்டும். ரஜினி போன்ற மிகப் பெரிய நடிகரை, நன்கு அறிந்த நடிகர்கள் பட்டாளத்துடன் காண வைத்ததிற்கு. "காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்” என்று தலை முடியை கோதிக்கொண்டு பாடல் பாடிய, இளமையும் துள்ளலும் கொண்ட ஒரு ரஜினியின் சாயலை மீட்டுக் கொண்டு வந்து ரசிகர்கள் மத்தியில் ஒப்படைத்ததிற்காக மீண்டும் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றிகளை கூற வேண்டும்.
கல்லூரி ஒன்றின் வார்டனாக பொறுப்பேற்க காட்டிலிருந்து வரும் வேட்டைக்காரன் போன்ற தோரணையுடன் படத்தில் அறிமுகமாகின்றார் காளி எனும் ரஜினி. வயசானாலும் அந்த ஸ்டைலுக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஃப்ரேம் பை ஃப்ரேம்மில் ரஜினியை ரசிகர்கள் அதகளப்படுத்தி திரையரங்குகளில் கொண்டாடி வரவேற்கிறார்கள்.
“எது செஞ்சாலும் மனசோட செய்யனும்... லவ்வோட சமைக்கனும்” என முனீஸ்காந்துடன் வரும் ரஜினியை, அவருடைய சமீபத்திய படங்களில் தொலைத்திருந்தோம் என்றாலும் மிகையாகாது.
ஏன் அந்த கல்லூரிக்கு வருகிறார், எதற்கு வார்டனாக பொறுப்பேற்கிறார், அங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு நல் அறிவுரைகள் கூறி அனைவருக்கும் உதவி செய்கின்றார் என்பதை எல்லாம் படத்தின் பிற்பாதி வரை சர்ப்ரைஸ்ஸாக வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர்.
சீனியர் - ஜூனியர் ரேக்கிங் பிரச்சனையில் பணக்கார வீட்டுப் பிள்ளையாக, ஆரம்பத்தில் இருந்தே கல்லூரி வார்டனின் கோபத்திற்கு ஆளாகின்றார் மைக்கேல் எனும் பாபி சிம்ஹா. மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவனாக வலம் வரும் மைக்கேல் கல்லூரிக்கு புதிதாக படிக்கும் வரும் மாணவர்களிடம் தொடர்ந்து பிரச்சனைகள் செய்ய, காளி தொடர்ந்து தடுக்க, என ஆடுபுலி ஆட்டம் கல்லூரியின் ஃபேர்வெல் டே வரை தொடர்கிறது.
ஆஸ்திரேலியாவில் இருந்து படிக்க வரும் அன்வர் மற்றும் ஜெனி காதல் ஜோடிகளுக்கு உதவி செய்யப் போய் தானும் மங்களத்துடன் (சிம்ரன்) காதலில் விழுகின்றார். கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தாலும் ஏன் அவர்களுக்கு என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழாமல் இல்லை.
இந்த காதல் ஜோடிகளுக்கு மைக்கேலால் பிரச்சனை எழுகின்றது. அதனை காளி தடுக்கும் போது காளியையும், அன்வரையும் தாக்க திட்டமிடுகின்றார்கள் மைக்கேலும் மைக்கேலின் அப்பாவும். “சம்பவம் எதுவும் வேண்டாம்... வெச்சு செஞ்சா மட்டும் போதும்” என்று அடியாட்களுடன் கல்லூரி வளாகத்திற்குள் வரும் மைக்கேலுக்கும் காத்திருந்தது பேரதிர்ச்சி.
Petta Movie Review in Tamil
காளியையும் அன்வரையும் கொலைவெறி கொண்டு தாக்குதல் நடத்த ஆட்கள் கல்லூரிக்குள் நுழைகின்றார்கள்... அவர்கள் யார்? அவர்களை ஏவியவர்கள் யார் ? காட்டிலிருந்து வேட்டைக்கு வந்த காளி காப்பாற்ற நினைக்கும் அன்வர் யார் ? தங்கள் இருவரையும் கொலை செய்ய வந்தவர்களை வைத்து செய்தார்களா காளியும் அன்வரும் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
“நான் வீரன் இல்லை கோழை தான். ஆனால் நான் அறிவாளி”... என்று பிளாஷ்பேக்கிலும் சரி, நடப்பு கதையிலும் சரி கெத்து காட்டியிருக்கிறார் நவாஸூதீன் சித்திக்.
“வாங்க எல்லாரும் சேந்து கலாச்சாரத்தை காப்பாத்துவோம்” - என்ன ரோல் கொடுத்தாலும், இதே மாடுலேசனோட எப்படித்தான் விஜய் சேதுபதி மேட்ச் செய்து ஸ்கோர் செய்கிறார் என்பதில் ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் வியந்து கொள்கிறார்கள். தனித்துவமாக வியக்க வைக்கிறார் விஜய் சேதுபதி.
முன்பாதியில் ரசனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், சில காட்சிகள் படத்தின் ஓட்டத்தோடு சுற்றிலும் பொருந்தவில்லை. இரண்டாம் பாதியில் ராமன் - வாலி கதை வலிய திணிக்கும் புனைவாக இருக்கிறது. சில கதாப்பாத்திரங்கள் படத்திற்கு பாரமாகவும், காட்சிகளின் நீளத்திற்காகவும் இணைத்தது போல் இருக்கின்றது.
கதையின் இறுதி வரை யாரும் பயணிக்கவில்லை. சிறு சிறு கதாப்பாத்திரங்களில் வந்து செல்கின்றார்களே தவிர, இறைவியின் அஞ்சலி போன்றோ, பூஜா தேவரியா போன்றோ யாரும் நெஞ்சில் பதியவில்லை.
ஆயிரம் முறை ரஜினியை பல்வேறு கோணங்களில் பார்த்து ரசித்து வியந்த ரசிகர்களுக்கும் சில சமயங்களில் வெறுப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது பல்வேறு ரஜினி படங்களின் சாயல்கள்.
இண்ட்ரோ சீனில் தொடங்கி “உள்ளே போ” என்று கூறும் வரை, “அட தலைவர் இந்த சீன அந்த படத்துலையே செஞ்சுட்டாரேம்மா” - என ரசிகர்கள் பழைய கதைகளை திரும்பிப் பார்க்கின்றார்கள்.
நடை, உடை, பாவனை, பிளாஷ்பேக் காட்சி என மனம் ஏனோ அடிக்கடி கபாலியையும், பாட்ஷாவினையும் நினைவிற்கு கொண்டு வருகிறது...
ஒப்பனையை மீறியும் தெரியும் ரஜினியின் வயதை சண்டைக்காட்சிகள் நிறைய கொடுத்து, வெளிப்படையாக்கியிருக்க வேண்டாம் என்பது தனிப்பட்ட கருத்து. சூப்பர் ஸ்டார் தான்... சண்டை, அடிதடி, அலட்டிக்கொள்ளாமல் ஆர்பரிக்கும் பஞ்ச் டையலாக்குகள் என இல்லாமல் நடித்தாலும் சூப்பர் ஸ்டார் தான். அவரை மக்கள் ரசிப்பார்கள் தான்.. மாற்றத்திற்கான நேரம் எது என்பதை ரஜினியும் கொஞ்சம் தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது.
“வீழ்வேனென்று நினைத்தாயோ?”
“செய்வீங்களான்னு கேக்கல.. செய்யனும்னும் சொல்றேன்..”
“புதிசா வர்றவனை அடக்கி, அடித்து ஒடுக்க நினைக்கும் அரசியல் இங்கு இருந்து தான் ஆரம்பிக்குது.”
“போர் தொழில் பழகும் நேரம் இது...”
“வாங்க எல்லாரும் கலாச்சாரத்தை காப்பாத்துவோம்”
“ஆண்ட்டி இந்தியன்ஸாடா” - என எங்கும் எப்போதும் தங்கு தடையின்றி தொடர்கிறது அரசியல் தெறிக்கும் வசனங்கள்...
பேட்டயின் ட்ரெய்லர் கொடுத்த பெரும் அளவு எதிர்பார்ப்பினை படம் பூர்த்தி செய்ததா என்ற கேள்விக்கான பதிலைத் தான் படம் முடிந்த பின்பும் தேடிக் கொண்டிருக்கின்றோம்.
படத்தின் ஒளிபதிவு கண்ணுக்கும் மனதிற்கும் நிறைவு. பசுமை போர்த்திய மலைச்சரிவுகளையும், வெகு காலமாக இயங்கி வரும் ஆங்கிலேயர் காலத்துக் கல்லூரி, அதன் அறைகள், அரங்கங்கள், அதில் புகும் ஒளிக்கோர்வைகள் என அனைத்தையும் துல்லியமாக ரசிக்க வைத்து ரசிகர்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார் ஒளிபதிவாளார் திருநாவுக்கரசு.
மரணம் மாஸ் மரணம் என்று பாடலிலும், பின்னணி இசையிலும் மாஸ் காட்டியிருக்கிறார் அனிருத் ரவிச்சந்திரன்.
நாட்டிற்கு கருத்து சொல்கின்றோம் என்று இரண்டு முக்கியமான செய்திகளை கையில் கொண்டு காளியை வைத்து இவ்வளவு களம் ஆடியிருக்க வேண்டாம் கார்த்திக் சுப்புராஜ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.