பேட்ட படம் தொடங்குவதற்கு முன் தியேட்டர் வாசலில் இருவர்.....
நபர் 1 - "அஜித்துக்கு வச்ச பேனர் அளவுக்கு ரஜினிக்கு இல்லையேப்பா...."
நபர் 2 - "இவருக்கே வயசு 70 ஆகப் போகுது... அப்போ அவரு ரசிகர்களுக்குலாம் 50+ இருக்கும். எல்லாம், புள்ள குட்டின்னு செட்டில் ஆனவங்க... முக்கால்வாசி பேரு பேரன், பேத்தி பார்த்துட்டாங்க பா... எல்லாம் ஆடி அடங்குனவுங்க ..."
பேட்ட படம் முடிந்த பிறகு அதே இருவர்...
நபர் 1 - "ஏம்பா படத்தை இயக்கினது சின்னப் பையனா? இல்லை நடிச்சது சின்னப் பையனா?"
நபர் 2 - "!!!?"
பேட்ட விமர்சனத்தை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் ஏற்கனவே கொடுத்துவிட்டோம்.
ஆனால், இந்த எழுத்து ஒரு ரஜினி ரசிகனுடையது.....
பேட்ட... ரஜினிகாந்த் எனும் ஈர்ப்பு விசை நடித்த மற்றொரு படம்... அவ்வளவுதான்! கடந்த 40 வருடங்களாக எந்தப் பக்கமும் சரியாமல், நேராக, வளைவு நெளிவின்றி சென்றுக் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பு விசை ஈர்க்காத ரசிகர்களும் இல்ல... பார்க்காத வெற்றியும் இல்ல... ஜீரோ லாஸ் (Zero Loss) எனும் படங்களை தமிழ் சினிமாவில் மிக மிக குறைவாக கொடுத்த ஆளுமை. ஆளானப்பட்ட எம்.ஜி.ஆருக்கே Zero Loss படங்கள் அதிகம். அவர் அரசியலிலும் வெற்றிப் பெற்றதால் பெரியளவு இமேஜ் உருவானது, அவ்வளவு தான்.
இங்க பிரச்சனை என்னன்ன.. அந்த ஈர்ப்பு விசைக்கு இப்போ ரொம்ப வயசாகிடுச்சு.... மனம் ஒத்துழைச்சாலும் உடம்பு ஒத்துழைக்கல... மாஸ் எனும் அன்பும், அதிகாரமும் கொண்டிருக்கும் கூண்டுக்குள் அந்த ஈர்ப்பு விசை சிக்கி பல வருஷங்கள் ஆச்சு!. அமிதாப் மாதிரி வயதான கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக-லாம் இந்த ஈர்ப்பு விசையால் நடிக்க முடியாது. நடிக்கத் தெரியாம இல்ல... நடிச்சா பார்க்க ஆள் இல்ல.... மாஸ் எனும் அந்தக் கூண்டு மீது ரசிகர்கள் வைத்திருக்கும் காதல் அப்படி. அந்தக் கூண்டைத் தாண்டி இந்தக் குதிரை மீது பந்தயம் கட்ட யாரும் இப்போது வரை தயாராக இல்ல.
அப்படியொரு மாஸ் குதிரையை வைத்து மாஸ் படமாக பேட்ட-யை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். 'சிவாஜி' படத்துக்குப் பிறகு காதலுடன் அந்த ஈர்ப்பு விசையை மீண்டும் இந்தப் படத்தில் ரசிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு நன்றி. மத்தபடி படத்தைப் பற்றி சொல்ல ஒண்ணுமில்ல....!
அப்புறம் ஒன்னே ஒன்னு கடைசியா சொல்லணும்..... சினிமாங்கறது பல ரசனைகள் உள்ளடக்கிய ஒரு பொழுதுபோக்கு. அங்கே பொழுதை போக்கத் தான் ரசிகன் வருகிறான். பரியேறும் பெருமாளையும் அவன் பொழுதுபோக்கா தான் ரசிக்கிறான்... 'பேட்ட'யையும் அவன் பொழுதுபோக்கா தான் ரசிக்கிறான். என்னமோ தெரியல.. சொல்லணும்-னு தோணுச்சு!.
பேட்ட விமர்சனம் 1 - காளி ஆட்டம் எப்படி இருக்குது?
பேட்ட விமர்சனம் 2 - வேற லெவல் ரஜினி... மாஸை கொண்டாடும் ரசிகர்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.