Viswasam Box Office collection and Petta Box Office Collection in Chennai: பொங்கல் வெளியீடாக அமைந்திருக்க வேண்டிய பேட்ட, விஸ்வாசம் படங்கள் 4 நாட்களுக்கு முன்பே வசூலைக் குறிவைத்து களம் இறங்கியிருக்கின்றன. இந்தப் படங்களின் வசூல் நிலவரங்களை பார்ப்போம்.
கடந்த வருடமே பொங்கல் வெளியீடு என்று அறிவித்துவிட்டு காத்திருந்த விஸ்வாசம் படக்குழு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல தியேட்டர்களையும் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்திருந்தது. இந்த நிலையில்தான் பேட்ட படக்குழு கலவரத்தை ஆரம்பித்தது.
ஏற்கெனவே சன் பிக்சர்ஸின் சர்க்கார், எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை. அதை சரிசெய்ய பொங்கலுக்கே பேட்ட படத்தை ரிலீஸ் செய்து விடுவதில் சன் பிக்சர்ஸ் உறுதியாக நின்றது. விஸ்வாசம் இந்தப் போட்டியில் ஒதுங்கிவிடும் என்றும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஏற்கனவே அஜீத்தின் விவேகம் கைவிட்டதால் விஸ்வாசத்தை பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸ் செய்து லாபம் பார்த்துவிட சத்யஜோதி பிலிம்ஸும் உறுதி காட்டியது. இந்தச் சூழலில் முக்கியமான பெரிய தியேட்டர்கள் ரஜினியின் பேட்ட படத்திற்கு முக்கியத்துவம் அளித்தன.
சென்னையில் பிரதான தியேட்டர்களான உதயம், காசி, உட்லேண்ட்ஸ், தேவி, ஆல்பர்ட், சத்யம் திரையரங்குகளில் பெரிய ஸ்கிரீன்கள் பேட்ட படத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல சத்யம், சாந்தம், தியாகராஜா, ஐநாக்ஸ், கமலா போன்ற திரையரங்குகளில் 1000 சீட் கெப்பாசிட்டி உள்ள பெரிய ஸ்கிரீன்கள் பேட்ட படத்திற்கும், அதே திரையரங்குகளில் 400 முதல் 550 வரை உள்ள சிறிய திரையரங்குகள் விஸ்வாசம் படத்திற்கும் ஒதுக்கியது அஜித் தரப்பை டென்ஷனாக்கியது.
இது மட்டுமல்லாமல் அனைத்து மால் திரையரங்கங்களிலும் கூடுதல் காட்சிகளாக பேட்ட படத்தையே திரையிட்டன. அதனால் ஓப்பனிங் ரஜினி வராதவரை அஜித்! ஆனால் ரஜினி வந்துவிட்டால் ஓப்பனிங் ரஜினிதான் என்பது பெரிய திரையரங்கங்களின் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே வெளிச்சமானது.
விஸ்வாசம் சிறப்புக் காட்சிகள் ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டாலும், அடுத்தடுத்த காட்சிகள் முதல் நாளே முடங்கியது. சென்னையில் முதல் நாள் மட்டும் பேட்ட 861 காட்சிகள் ஓடியது. அதுவும் பெரிய திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடி முதல் நாள் 2.02 கோடியை வசூலித்தது. இது முந்தைய 2,0-வை விட குறைவானாலும் மிகச்சிறந்த வசூல் என்றே சொல்லப்படுகின்றது.
விஸ்வாசம் சிறிய திரையரங்குகளில் 502 காட்சிகள் ஓடி 87% ஹவுஸ்புல் ஆகியது. அது 67 லட்சம் ரூபாய் வசூலித்தது. எடுத்துக்காட்டாக, சென்னையின் மத்திய பகுதியான உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தில் 1120 சீட் கெப்பாசிட்டி ஸ்கிரீனில் பேட்ட படம் காட்சி ஒன்றுக்கு 1.1 லட்சம் வீதம் நாளொன்றுக்கு 4.4 லட்சமும், விஸ்வாசம் 560 சீட் கெப்பாசிட்டி கொண்ட சிறிய சிம்பொனியில் 54 ஆயிரம் வசூலித்து நாளொன்றுக்கு 2இலட்சத்து 20ஆயிரமும் வசூலித்தன.
அதேபோல் ஆல்பர்ட் திரையங்கத்தில் 980 சீட் கெப்பாசிட்டியில் பேட்ட ஒருநாளைக்கு 3.4 லட்சமும், விஸ்வாசம் அதே காம்ப்ளக்ஸில் பேபி ஆல்பர்ட்டில் 420 சீட் கெப்பாசிட்டியில் 1.20 லட்சமும் வசூலித்துள்ளது. இதே நிலை சென்னை முழுவதும் பெரிய திரையங்கங்களில் பேட்டயின் ஆதிக்கமும், சிறிய திரையங்கங்களில் விஸ்வாசமும் வசூலித்தன.
பெரிய திரையரங்குகளில் வெளியான பேட்ட படம் சென்னையில் இரண்டாவது நாளிலேயே கூடுதலாக 48 ஷோக்கள் ஓடியது. மூன்றாவது, நான்காவது நாட்களில் பேட்டயின் ஆதிக்கம் அதிகமாகும் என்று ஆல்பர்ட் திரையரங்க மேலாளர் கூறியது அவரது முப்பதாண்டுகால தியேட்டர் அனுபவம்.
பேட்ட இரண்டாவது நாள் வசூல் சென்னை மட்டும் ரூ 2.58 கோடி! மூன்றாவது, நான்காவது நாட்களில் மொத்த வசூல் 10 கோடியை நெருங்கும் என்று திரையரங்க வட்டாரங்கள் கூறுகின்றன. விஸ்வாசம் முதல் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து சென்னையில் 1 கோடியே 13 லட்சத்தை தொட்டுள்ளது. மூன்றாம் நான்காம் நாட்களில் அதாவது மாயாஜால், சத்யம்குரூப்ஸ், எஸ்பி ஐ சினிமாஸ் உள்ளிட்ட பல இடங்களில் காட்சிகள் வெகுவாக அதாவது 100 காட்சிகளுக்குமேல் குறைக்கப்படும் சூழல் உறுவாகியுள்ளது. நான்கு நாட்களில் மொத்தம் 3 கோடிகளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பல்வேறு மட்டங்களிலும் விசாரித்து வழங்கப்படுகிற தகவல்கள் இவை!
திராவிட ஜீவா