Petta VS Viswasam Pre Release Collection, Reservation Status: தைப் பொங்கல் ரிலீஸ் படங்களான பேட்ட, விஸ்வாசம் இடையே தியேட்டர்களைப் பிடிப்பதில் இருந்து, வசூலைக் குவிப்பது வரை போட்டிதான்! ரிலீஸுக்கு முந்தைய வசூலில் எந்தப் படம் ‘டாப்’புன்னு நினைக்கிறீங்க? தெரிந்து கொள்ள தொடருங்கள்!
பொங்கல் ஜல்லிக்கட்டு இந்த முறை பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு இடையேதான்! பொதுவாக ரஜினிகாந்த் படங்கள் வெளியாகிற வேளையில் இதர முன்னணி ஹீரோக்கள் தங்களின் படங்களை வெளியிடுவதில்லை. ரஜினிகாந்தும் இதர நடிகர்களின் படங்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக பண்டிகை காலங்களில் தனது படத்தை ரிலீஸ் செய்வதில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு முதல் முறையாக ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, பொங்கல் ரிலீஸாக வெளிவருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்திற்கு ரஜினி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. 1990-களில் ரஜினி இருந்த தோற்றத்தை இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
பேட்ட, இன்னொரு பாட்ஷாவாக இருக்கும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் குதூகலமாக சொல்கிறார்கள். பேட்ட படத்தின் பாடல்கள், டிரெய்லர் ஆகியனவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே பேட்ட படத்திற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட படம் விஸ்வாசம்! தல அஜீத் நடிப்பில், சத்ய ஜோதி பிலிஸ்ம்ஸ் தயாரிப்பில் வெளிவரும் படம் இது! முதல் முறையாக அஜீத் படம் நேரடியாக ரஜினி படத்துடன் கோதாவில் குதிக்கும் நிகழ்வு இப்போதுதான் நடக்கிறது.
பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஜனவரி 10-ம் தேதி ரிலீஸ் ஆகின்றன. இதையொட்டி கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் தியேட்டர்களைப் பிடிப்பதில் இரு படங்களுக்கும் போட்டா போட்டி!
தமிழ்நாட்டில் சினிமா திரையிடும் நிலையில் சுமார் 1100 தியேட்டர்கள் இருக்கின்றன. இவற்றில் 614 தியேட்டர்களை பேட்ட ‘புக்’ செய்து கொண்டது. அதிலும் அதிக பார்வையாளர்கள் உட்காரும் வசதி கொண்ட பெரிய தியேட்டர்களில் பெரும்பாலானவவை ரஜினிகாந்த் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.
முக்கிய நகரங்களில் ஒரே தியேட்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் படம் திரையிடப்படுவது வழக்கம். அந்த வகையில் ரஜினிகாந்தின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 750 ஸ்கிரீன்களில் திரையிடப்படும் என தெரிய வந்திருக்கிறது.
அஜீத்தின் விஸ்வாசம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, முன்கூட்டியே தியேட்டர்களை பிடிக்கும் வேலையில் இறங்கியிருந்தாலும் சுமார் 450 தியேட்டர்களை கைவசப்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள். இதன் ஸ்கிரீன்களின் எண்ணிக்கை 550 முதல் 600 வரை இருக்கும் என தகவல்!
ஜனவரி 8-ம் தேதி நிலவரப்படி, இரு படங்களுக்குமே அனைத்து தியேட்டர்களிலும் முதல் நாள் ‘ஷோ’க்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ரஜினிக்கு அடுத்தபடியாக இன்னொரு நடிகருக்கும் இப்படி முழுமையாக முன்பதிவு ஆனது இதுதான் முதல் முறை என்கிறார்கள், சினிமா வட்டாரத்தில்! அந்த வகையில் விஸ்வாசம், அஜீத்துக்கு ஒரு சாதனை படம்!
ரஜினிகாந்தின் பேட்ட அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் நல்ல விலைக்குப் போயிருக்கிறது. ஆனால் விஸ்வாசம், ஆந்திராவில் ரிலீஸ் ஆவதில் தடை விழுந்திருக்கிறது. கேரளா, கர்நாடகாவிலும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. வெளிநாட்டு உரிமையிலும், 2.0 உருவாக்கிய தாக்கம் ரஜினியின் பேட்ட பெரிய தொகைக்குப் போயிருக்கிறது.
மொத்தத்தில் ரிலீஸுக்கு முன்பாக பிரிமியர் ஷோ மற்றும் முன்பதிவு மூலமாக உலகம் முழுவதும் பேட்ட வசூல் செய்திருக்கும் தொகை 74 கோடி என்கிறது சினிமா வட்டாரம்! தல அஜீத் படம் தமிழகத்தில் மட்டும் ‘ஃபைட்’ கொடுத்து சுமார் 20 கோடியை அள்ளியிருக்கிறது.
ரிலீஸுக்கு பின்பு, வசூல் போட்டியில் யார் முந்துகிறார்கள்? என்பதை அப்புறம் பார்க்கலாம்!