Petta vs Viswasam: இளம் ஹீரோக்கள் ஆதிக்கம் உலக அளவிலும், இந்தியாவின் மற்ற மாநில மொழிகளிலும் ஆக்ரமித்தாலும் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் ஆதிக்கம் குறையவில்லை. தலைமுறையை தாண்டி தனக்குப்பின் வந்த நடிகர்களே கதாநாயகன் அந்தஸ்திலிருந்து கீழிறங்கி 20 வருடங்களாகிவிட்டபோதும், இளம் கதாநாயகர்களே தற்போது வயதான நிலையை அடையும் நிலைக்கு வந்துவிட்ட போதும் ரஜினி இன்னமும் இளமை ப்ளஸ் புதுமைதான்!
ரஜினிகாந்த் படங்களின் வியாபார அளவும் ஓப்பனிங் மாஸும் குறையாமல், கூடிக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத நிஜம். ரஜினிகாந்த் படம் வெளியாகும் தருணத்தில் எந்த முன்ணணி கதாநாயகர்களின் படமும் மோதுவதற்கு தயங்குவதும் ரஜினிகாந்தின் மாஸை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் 2.0 படம் நவம்பர் 29-ல் வெளியாகிறது. அடுத்த 6 வாரங்களில் அவரின் பேட்ட படம் வருகிறது. இன்றைய சூழலில் இதுவும் ஒரு போல்ட் மூவ்தான்!
பேட்ட ரஜினிகாந்தின் மாஸ் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் அஜித்தின் அடுத்த படமான விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்துள்ளதால் அஜித் தரப்பும், தயாரிப்பு நிறுவனமும் அதிர்ந்து போகாமல் இருக்குமா?
இதில் ட்விஸ்ட் என்னவென்றால், விஸ்வாசம் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் ரஜினிக்கு மிக நெருக்கமானவரான ஆர் எம் வீரப்பனின் மருமகன் ஆவார். இவரது தயாரிப்பில் கடந்த வருடம் அஜித் நடித்து வெளியான விவேகம், எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அதை மனதில் வைத்தே தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு, அஜித் இப்போது ‘விஸ்வாசம்’ காட்டுகிறார் என்பது திரைத்துறையினருக்கு தெரியும்.
ஆனால் அந்த விஸ்வாசம், இப்படி பேட்ட கூட மோத வேண்டியிருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ரஜினி படம் வெளிவந்தால் தியேட்டர் ஆக்கிரமிப்பு முதல் ரசிகர் பலம் வரை போட்டியிடுவது சிரமம். இந்த உண்மையை புரிந்துகொண்ட தயாரிப்பு தரப்பு நட்பு அடிப்படையில் ரஜினியிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்திவருவதாக திரையுலகில் தகவல்கள் கசிகின்றன.
ரஜினிக்கும் சத்யஜோதி நிறுவனம் மீதும், அஜித் மீதும் ஒரு சாப்ட் கார்னர் உண்டு. கலைஞர் முன்னிலையில் அஜீத் பேசியதற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டியதை மறக்க முடியுமா? ஆனாலும் பேட்ட தயாரிப்பாளரிடம் பேசிவிட்டு முடிந்த அளவிற்கு உதவுவதாக ரஜினி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
பேட்ட தள்ளிப் போகுமா? விஸ்வாசம் முந்துமா? பார்க்கலாம்!
திராவிட ஜீவா