'பேட்ட' படக்குழுவினரின் விளம்பரத்துக்கு, விஸ்வாசம்’ படக்குழுவினரின் பதிலடியால் ட்விட்டர் தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும், தல அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரேநாள் ரிலீசானது. இதுநாள் வரை, ரஜினி - அஜித் ரசிகர்கள் இடையே சிறு தகராறு கூட ஏற்பட்டது கிடையாது. ஆனால், இரு படங்களின் டிரைலர் ரிலீசானதில் இருந்து சமூக தளங்களில் கடும் மோதல் போக்கு உருவானது.
அநாகரீகமான வார்த்தைகளாலும், தேவையில்லாத கருத்துகளாலும் சமூக தளங்களில் இரு நடிகரின் ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
படம் ரிலீசாகி நான்கு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இரு படங்களும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியான விடுமுறை என்பதால், தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வருகிறது. ரசிகர்கள் ரிப்பீட் மோடில் இரண்டு, மூன்று தடவை என படம் பார்த்து வருகின்றனர்.
விஸ்வாசத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் குறைக்கப்பட்டு, செண்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரத் தொடங்கியுள்ளனர். இது பொதுவாக அஜித் படங்களில் நடக்காத ஒரு நிகழ்வாகும்.
அதேசமயம், விண்டேஜ் ரஜினியை பல வருடங்கள் கழித்து கண் முன் நிறுத்திய பேட்ட படம், பட்டையை கிளப்பி வருகிறது. இன்ச் பை இன்ச்சாக ரஜினியிசம் காட்டியிருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் அன்பை ஒரேநாளில் சம்பாதித்துவிட்டார்.
இந்நிலையில், முதன் முறையாக இரண்டு படக்குழுவினருக்குமே நேரடி வார்த்தைப் போர் சமூகவலைத்தளத்தில் நடைபெற்றுள்ளது.
க்யூப் நிறுவனத்திலிருந்து எந்த படத்துக்கு எவ்வளவு பாஸ்வோர்ட்கள் கொடுக்கப்பட்டது என்பதை அறிவித்தார்கள். இதை வைத்து 'பேட்ட' படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டார்கள். அதில் 3 மொழிகள், 1063 திரையரங்குகள், 34 நாடுகள் என இடம்பெற்றிருந்தன. 'விஸ்வாசம்' படமும் 541 திரையரங்குகள், 31 நாடுகள் என க்யூப் நிறுவனத்தின் தகவலை வைத்து போஸ்டர் வெளியிட்டார்கள். இதை 'பேட்ட' படக்குழுவினர் அனைவருமே பகிர்ந்தனர். "தமிழகத்தில் மட்டும் 600 திரையரங்குகளுக்கு அதிகமாக வெளியானது. 2-வது நாள் முதலே திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக 'விஸ்வாசம்' படத்தை தமிழக முழுக்க விநியோகம் செய்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் "தமிழகத்தின் மக்களுக்கும், திரையரங்க அதிபர்களுக்கும் உண்மை என்னவென்பது தெரியும். ஏன் அனாவசியமாக போட்டியையும் மோதலையும் உருவாக்க முயல்கிறீர்கள்? தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பார்த்தால் தெளிவடையலாம். நம் இருவரது படங்களும் எப்படி வசூலித்துள்ளன என்பதைப் பார்ப்போம்” என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பல ரஜினி ரசிகர்கள், தற்போது திரையரங்குகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படக்குழுவினருமே முதன் முறையாக வார்த்தைப் போரில் ஈடுபட்டதால் சமூக தளங்களில் பரபரப்பு நிலவியது.