சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 12), அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் குணசித்திர கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், வெகுவிரைவிலே ஹீரோவாக உயர்ந்தார். தனது நடிப்பு திறமையாலும், அசாத்தியமான ஸ்டைலாலும் ரசிகர்களைக் கவர்ந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலமாக முன்னனி நட்சத்திரமாக இருந்து வரும் ரஜினி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் நாளும் திரையரங்களில் திருவிழாதான். அந்த அளவிற்கு ரசிகர்களை ரஜினி தன் திறமையால் கவர்ந்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்தநிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடி, ரஜினிகாந்த் ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான நடிப்பால் மக்களை ஊக்கப்படுத்தட்டும். ரஜினி நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலினும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன். என ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அடுத்ததாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட இறைவனை இறைஞ்சுகிறேன் என ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil