பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது இந்திய சினிமா.
Advertisment
அதிலும் குறிப்பாக பாலிவுட்டில், சச்சின், எம்.எஸ்.தோனி, மேரிகோம் போன்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டராக’ வெளிவந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் நரேந்திர மோடியாக, நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பொம்மன் இரானி ரத்தன் டாடாவாகவும், மனோஜ் ஜோஷி அமித்ஷாவாகவும், கிஷோரி ஷகானே இந்திரா காந்தியாகவும் நடித்துள்ளனர். பி.எம் நரேந்திர மோடி என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
மேரி கோம், சர்ப்ஜித் ஆகிய வாழ்க்கை வரலாற்றுப் படங்களை இயக்கிய ஓமங் குமார் இதனை இயக்கியுள்ளார்.
லெஜண்ட் குளோபல் ஸ்டுடியோ மற்றும் ஆனந்த் பண்டிட் மோசன் பிக்சர்ஸ் சார்பில் சுரேஷ் ஓபராய், சந்தீப் சிங் ஆகியோர் இதனை தயாரித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 11 முதல் மே 19 வரை இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த சமயத்தில் மோடியின் திரைப்படம் வெளியாவது, அதிக கவனத்தைப் பெறும் என்கிறார்கள் பா.ஜ.க தொண்டர்கள்.