எம்.ஜி.ஆர் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வேண்டாம் என்று கூறிய பல்லவியை, இன்னொரு எம்.ஜி.ஆர் படத்தில் கே.வி.மகாதேவன் மிகப்பெரிய ஹிட் ஆக்கினார் என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி பாணியை வைத்திருந்தவர் வாலிபக் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வாலி. அனைத்து வயதினருக்கும் ஏற்ற, அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பாடல்களை இயற்றுவதில் வல்லவர் வாலி. காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என எந்த சூழ்நிலைக்கும் பாடல்களை இயற்றி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் வாலி.
இந்தநிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் வேண்டாம் என்று கூறிய பல்லவியை, இன்னொரு எம்.ஜி.ஆர் படத்தில் கே.வி.மகாதேவன் மிகப்பெரிய ஹிட் ஆக்கினார் என்று பேட்டி ஒன்றில் கவிஞர் வாலி கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் பேசிய கவிஞர் வாலி, ”பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம் ஒன்றுக்கு டூயட் பாடல் எழுதினேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். அதில் அந்த டூயட் பாடலுக்கு, ”புத்தம் புதிய புத்தகமே, உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான், பொதிகை வளர்த்த செந்தமிழே, உன்னை பாட்டில் வடிக்கும் புலவன் நான்,” என்ற வரிகளை எழுதிக் கொடுத்தேன். எம்.ஜி.ஆர் என்றாலே, அந்த கதாநாயகனுக்கு தமிழோடு சம்பந்தப்பட்ட வார்த்தை வந்தால் தானே நல்ல இருக்கும். ஆனால் வரிகள் நீளமாக இருக்கு, சின்னதா எழுதிக் கொடுங்க என விஸ்வநாதன் கேட்டார். சரி என நான் கிளம்பிவிட்டேன்.
அன்றைக்கு மதியமே எனக்கு அரச கட்டளை படத்திற்கான கம்போசிங் இருந்தது. இந்தப் படத்திற்கு கே.வி மகாதேவன் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி நடித்தனர். இந்தப் படத்திற்கு ஒரு டூயட் பாடல் தேவைப்பட்டது. அதற்கு புத்தம் புதிய புத்தகமே, உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் என்ற அதே பல்லவியை கொடுத்து, டியூன் போடச் சொன்னேன். அவர் அபாரமாக ட்யூன் போட்டார். இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“