பழைய நல்ல விஷயங்கள் புளித்த கள்ளைப் போல, அதிக போதை தரக்கூடியது. அதிலும் பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள், காலம் கடந்து அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளும்போது, அது அவர்களுக்கு மேலும் சுவாரசியமாகவும் வியப்பாகவும் இருக்கும்.
அந்த வகையில், கவிஞர் வைரமுத்து எழுதி பாடகி வாணி ஜெயராம் பாட இருந்த ஒரு பாடலில், கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகளைப் போலவே இருக்கிறதே என்று அறிந்து, கவிஞர் வைரமுத்து விரைவாக சென்று அந்த பாடல் வரிகளை மாற்றிய சுவாரசியமான நிகழ்வை கவிஞர் வைரமுத்து ஒரு நிகழ்வில் நினைவுகூர்ந்துள்ளார்.
அதாவது, படைப்பு சிந்தனையில், ஒரே மாதிரியான வரிகள் கவிஞர்கல் மனதில் வ்ந்து விழுவது உண்டு. அப்படி, கவிஞர் வைரமுத்து, பாடல் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில், அவர் பாடல் பதிவுக்காக எழுதிகொடுத்துவிட்ட ஒரு பாடலில், ஒரு வரி கவிஞர் கண்ணதாசன் எழுதியதைப் போல இருப்பதை அறிந்து, அந்த வரிகளை மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் எப்படி ஓடினார் என்பதைக் கூறியுள்ளார். உலகம் வைரமுத்து கவிஞர் கண்ணதாசனைப் பார்த்து காப்பி அடித்தார் என்று பழி சொல்லுமே என்று அஞ்சி ஓடியிருக்கிறார். நல்ல வேளையாக, அந்த பாடலை வாணி ஜெயராம் பாடுவதற்கு மைக் கிட்ட வரும்போது, ஓடிச் சென்ற வைரமுத்து அதை மாற்றி பாட வைத்திருக்கிறார்.
இந்த சுவாரசியமான நிகழ்ச்சியை கவிஞர் வைரமுத்துவே கூயியிருக்கிறார், “நான் அப்போது அலுவலக மொழி ஆணையத்தில் ராஜாஜி ஹாலில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு ஒலிப்பதிவு என்று என்னை வரச் சொல்லிவிட்டார்கள். பாடலைக் கொடுத்துவிட்டேன். அப்போது வசதி கிடையாது. கார் கிடையாது. திருவல்லிக்கேணியில் 25 பி பஸ் பிடிக்க வேண்டும், வடபழனியில் இறங்கி ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குள் நடந்துபோவதாகத் திட்டம், வள்ளுவர் கோட்டம் வந்த உடனே பஸ்ஸுக்குள்ள, நட்சத்திரம் என்ற ஒரு பாட்டு கேட்கிறது.
அதில் நான் எழுதியிருக்கிறேன், பாதையில் ராகம் சோகங்களோ, தாமரைப் பூவின் தாகங்களோ என்று பாட்டு எழுதியிருக்கிறேன். நான் போகும்போது, தாமரைப் பூவின் சூரிய தாகம் என்று ஒரு பாட்டு கேட்கிறது. அது கண்ணதாசன் எழுதிய பாட்டு.
நெஞ்சில அடிக்குது, தாமரைப் பூவின் தாகங்களோ என்று எழுதியிருக்கிறேன், தாமரைப் பூவின் சூரியதாகம் என்று கவிஞர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் ஒலிப்பதிவு ஆகிவிட்டால், கண்ணதாசனைப் போல, வைரமுத்து அடித்த காப்பி என்றுதானே உலகம் பேசும், இந்த வரியை மாற்ற வேண்டுமே என்று பஸ்ஸை விட்டு குதிக்கிறேன். அப்போது அங்கிருந்து ஆட்டோவில் போனால், 1 ரூபாய் 80 காசு ஆகும். அப்போது என்னிடம் 2 ரூபாய் இருக்கிறது. 1 ரூபாய் 80 காசு குறைந்தபட்ச கட்டணம்.
பஸ்ஸைவிட்டு இறங்கி ஆட்டோவில் குதிக்கிறேன். அந்த அம்மா (வாணி ஜெயராம்) பாடிவிடுவார்களே, வரியை மாற்ற வேண்டுமே என்று ஓடுகிறேன். யோசிக்கிறேன் வரமாட்டேங்குது. பாட்டு எழுத சந்தோஷமான சூழல் வேண்டும், கண்ணீரைக்கூட ஆனந்தமாகச் சிந்திக்க வேண்டும். சோகத்தைக்கூட உற்சாகத்தில்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பாட்டு வரும். இந்த டென்ஷனில் மண்டையில் யோசிக்கிறேன். வடபழனியைத் தாண்டும்போது, பாதையில் ராகங்கள் சோகங்களோ, கீரலைப் போடும் கோலங்களோ என்று மாற்றுகிறேன். அதை நெஞ்சிலே எழுதிக்கொள்கிறேன். எழுதிக்கொண்டு வடபழனியில் இறங்கி ஓடுகிறேன். நல்லவேளை, பாடகி வாணி ஜெயராம், பல்லவியை பாடி பயிற்சி செய்துவிட்டு மைக் கிட்ட வருகிறார்கள். அம்மா அந்த ஒரு வரியை மாற்றுங்கள் என்று கூறி மாற்றிவிட்டு, உள்ளே போய் உட்கார்கிறேன், மூச்சு வாங்குகிறது. அந்த அம்மா பாடின உடனே ஆயிரம் தேவதைகள் என் தலைமேல் பூச்சொறிவதுபோல இருந்தன.
என்ன குரல், என்ன பாவம், தமிழில் வெளிவந்த முதல் கசல் அது. ஒரு இந்தி பாட்டை கேட்டுவிட்டு, கசல் பண்ணிவிட்டு, மறைந்துபோன சங்கர் கணேஷ் 2 பேரும் கம்போஸ் பண்ண பாட்டு அது. மேகமே மேகமே பாட்டு வந்த உடனே தமிழ்நாடே திரும்பிப் பார்த்தது. இளையராஜா உச்சத்தில் இருக்கிறார். சங்கர் கணேஷ் கொஞ்சம் கீழே இருக்கிறார். இளையராஜாவுக்கு சமமாக மேலே வந்து நின்ன ஒரே பாட்டு அது. ரெண்டு பேருக்கும் ஒரே சமமான போட்டி வந்தது. இளையராஜா உயரத்துக்கு சங்கர் கணேஷைக் கொண்டுவந்தது அந்த மேகமே மேகமே பாட்டு, அந்த பாடலின் வெற்றியில் 5 வருடங்கள் ஓடினார்கள். ஒரு வெற்றி போதும், 5 ஆண்டுகள் ஓடுவதற்கு” என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.