போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அஜாக்கிரதையாக செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கி சென்ற யூடியூபர் வி.ஜே.சித்து மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஃபன் பண்றோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் யூடியூப்பில் பிரபலமான வி.ஜே.சித்து தற்போது, வி.ஜே.சித்து வி லாக்ஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல் புதிதாக வெளியாகும் படங்களின் ஹீரோக்களை அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சியான மொட்டை மாடி பார்ட்டி என்ற நிகழ்ச்சியை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில், ஆர்.ஜே.பாலாஜி, கவின். லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடசத்திரங்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே வி.ஜே. சித்து, விதிகளை மீறி செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி சென்றதாக, சென்னை கீழ் குப்பத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள புகாரில், சித்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியது தொடர்பாக, யூடியூப்பில் வெளியாகியுள்ள வீடியோ இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல வழி வகுக்கும் வகையில் உள்ளது. அவரது வீடியோவில் ஆபாச வார்த்தைகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் போக்குவரத்து விதிகளை மீறிய சித்து மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு, பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் விதிகளை மீறி இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக பலமுறை கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் சமீபத்தில் இந்த புகாரின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு பிரபல யூடியூப்பர் சித்து மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “