/indian-express-tamil/media/media_files/VeN5S5DYugNONI8gZT96.jpg)
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் ஒரு பிரிவினருக்கு எதிராக இருப்பதாக கூறி கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பட வெளியீடும் தள்ளிப் போனது. இதைத் தொடர்ந்து, நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பழனிச்சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “எங்கள் படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் திரையரங்கை சேதப்படுத்துவோம் என்றும் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆகவே படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில் இந்தப் படத்தை திரையிட முடிவு செய்த நிலையில் குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் பின்வாங்கி விட்டனர்.
எந்த சாதி மத மொழிக்கு எதிராகவும் இந்தப் படம் எடுக்கப்படவில்லை. முறையான தணிக்கை சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை திரையிடுவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் “எந்த திரையரங்கு உரிமையாளர்களும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. மனுதாரரும் எந்த திரையரங்கத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. 150 திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி கூறுகையில், “எந்த திரையரங்குகளில் பாதுகாப்பு தேவை என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் படக்குழு மனு அளிக்கும் பட்சத்தில், அந்த திரையரங்குக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.