'போங்கு' விமர்சனம்

அபாண்டமாகத் திருட்டுப் பழி சுமத்தப்படும் நண்பர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க நிஜமாகவே திருடர்களாவதுதான் போங்கு படத்தின் கதை.

நட்டியும் அவர் நண்பர்களும் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள். சந்தர்ப்ப வசத்தால் அவர்கள் மீது கார் திருட்டுப் பழி விழுந்துவிடுகிறது. பெரிய இடத்து சமாச்சாரம் என்பதால் பெரும் அவதிக்கு உள்ளாகும் அவர்கள் வெளியே வந்த பிறகு அவர்கள் மீது இருக்கும் களங்கம் நீங்கவில்லை என்பதால் வேலை கிடைக்கவில்லை. வெறுத்துப்போன அவர்கள் கார் திருட்டையே தங்கள் தொழிலாகக் கொள்கிறார்கள்.
லோக்கல் தாதாவுக்காக விலை உயர்ந்த காரைத் திருடுகிரார்கள்.

அந்தச் சம்பவத்தில் எதிர்பாராத விதமாக அவர்களுக்குச் சில அனுகூலங்கள் கிடைக்கின்றன. அடுத்து மதுரையில் ஒரு பெரிய தாதாவிடமிருந்து கார்களைத் திருடும் அசைன்மெண்ட் கிடைக்கிறது. தாதாவுக்கும் அவர்களுகும் என்ன தொடர்பு?தாதாவின் இரும்புக் கோட்டைக்க்குள் நுழைந்து அவர்களால் மீள முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது?

தாஜின் திரைக்கதை, இயக்கத்தில் வந்திருக்கும் இந்தப் படத்தில் புத்திசாலித்ததனமும் சாகசமும் கலந்து கார் திருட்டுக் காட்சிகள் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த திருப்பங்கள் படத்தை வேகமாக நகர்த்திச்செல்கிறன. வெள்ளந்தியான பாத்திரத்தில் வரும் ராமதாஸின் புண்ணியத்தில் கலகலப்புக்குப் பஞ்சம் இல்லை.

அடுத்தடுத்து வெற்றிகரமாக இரண்டு கார்களைத் திருடும் இவர்கள் மேலும் பெரிய சவாலை ஏற்றுக்கொண்டு மதுரைக்குச் சென்ற பிறகு படம் வேகம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அங்கே படம் வழக்கமான பாதைக்குள் நுழைந்துவிடுகிறது.

மதுரையில் இவர்கள் வகுக்கும் வியூகத்தில் வேகம் இருக்குமளவு விவேகம் இல்லை. என்றாலும் எம்.பி. மகளுக்கும் தாதாவுக்கும் இடையே உள்ள பிரச்சினை, நட்டி குழுவினருக்கும் தாதாவுக்கும் இடையேயான பழைய பகை, அதுல் குல்கர்னியின் புலனாய்வு, கார் திருட்டைத் தடுக்க வரும் சாம்ஸின் அட்டகாசம் ஆகியவற்றால் படத்தைப் பார்க்க முடிகிறது.

மதுரை தாதாவைப் பற்றி பில்ட் அப் தரப்படும் அளவுக்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை. ராமதாஸை நட்டி குழுவினர் தங்களுடன் சேர்த்துக்கொண்டதற்கான காரணம் வலுவாக இல்லை. எம்.பி. மகள் தொடர்பான சஸ்பென்ஸ் எதிர்பார்த்ததுதான். அந்தத் திருப்பம் படமாக்கப்பட்டுள்ள விதத்தில் நம்பகத்தன்மையும் இல்லை. கார் திருட்டுக் காட்சிகளில் சுவாரஸ்யம் இருக்குமளவு சரக்கு இல்லை. எல்லாமே விளையாட்டு சமாச்சாரம்போல இருக்கிறது.

நட்டி குழுவினருக்கும்மதுரை தாதாவுக்கும் இடையே ஏற்பட்ட பழைய பகை சமாச்சாரம் வலிந்து திணிக்கப்பட்டதாக உள்ளது. நட்ராஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடிந்தவரை சரியாகச் செய்கிறார். அவரது விரைப்பும் முறைப்பும் பல இடங்களில் ஒட்டவே இல்லை. அவரது காதலியாகவும் கூட்டாளியாகவும் வரும் ரூஹி சிங் பார்க்க அழகாக இருக்கிறார். நடிப்பில் குறை வைக்கவில்லை.

சரத் லோகிதாஸ்வா பேச்சிலும் முகபாவனைகளிலும் மிரட்டுகிறார். ஆனால், அவரது பாத்திரப் படைப்பு பலவீனமாக உள்ளதால் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. அதுல் குல்கர்னி அட்டகாசமாகச் செய்திருக்கிறார். ராமதாஸ் கலகலபுக்கு உத்தரவாதம் தருகிறார். ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்தாலும் சாம்ஸ் கலக்குகிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களோ பின்னணி இசையோ சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. சேஸிங் காட்சிகள் நன்கு படமாக்கபட்டுள்ளன.
படம் முழுவதும் பில்ட் அப் அதிகம் உள்ளது. அவற்றின் முடிவுகள் பெரும்பாலும் ஏமாற்றமாகவே உள்ளன. நல்ல போங்குதான்!
மதிப்பு: 2 / 5

×Close
×Close