scorecardresearch

தஞ்சை கோவில் பிரமிப்பு… மும்பை பிரஸ்மீட்டில் தெறிக்கவிட்ட விக்ரம்!

தென்னிந்தியா வட இந்தியா என்று இல்லாமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்றுதான் பெருமையாக இருக்க வேண்டும்

தஞ்சை கோவில் பிரமிப்பு… மும்பை பிரஸ்மீட்டில் தெறிக்கவிட்ட விக்ரம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்.ஜி.ஆர். முதல் பாரதிராஜா வரை பலரும் முயற்சித்து பூஜையுடன் பின்வாங்கிய நிலையில், இயக்குனர் மணிரத்னம் இதை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் 2 பாகங்கள் தயாராகிவிட்ட நிலையில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி பிரம்மாண்டாக வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருண்மொழிவர்மானா ஜெயம்ரவி, வந்தியதேவனாக கார்த்தி. பெரிய பழுவேட்டையராக சரத்குமார். சின்ன பழுவேட்டையராக பார்த்தீபன், நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, ஜெயராம் பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே படம் தொடர்பான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்தி படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், விக்ரம், மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் விக்ரம் ராஜ ராஜ சோழனின் வரலாறு மற்றும் தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

பலருக்கும் பல துறைகளில் ஆர்வம் இருக்கும் ஆனால் நான் நினைப்பது வரலாற்றைத்தான். நாம் குழந்தைகளாக இருக்கும்போதே பல கதைகளை சொல்லி நம் முன்னோர்கள் குறித்து தெரிந்து வைத்திருப்போம். மன்னர்களை பற்றி கடந்த கால கதைகளில் சொன்னார்கள். இப்போது நாம் பிரமீட் பற்றி பேசிக்காண்டிருக்கிறோம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு கோவில்கள் எப்படி கட்டினார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?  

இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் உள்ளன. அதே சமயம் மிக உயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் தஞ்சாவூரில் உள்ளது. அந்த கோவிலின் உச்சி கோபுரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டது. சமீபத்தில் ஒருவர் பேசுவதை கேட்டேன். கட்டப்பட்டு சாய்ந்த கோபுரத்தை பார்த்து வாவ் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் எங்களிடம் இருக்கும் கோவில் 1000 ஆண்டுகள் ஆனாலும் சாய வில்லை எந்த பிடிமானமும் இல்லாமல் தாங்கி நிற்கிறது.

அந்த கோபுரத்தில் உள்ள கல்லை 6 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து எவ்வித எந்திரமும் இல்லாமல் நவீன வசதியும் இல்லாமல் யானை மற்றும் மக்களை கொண்டு இழுத்து வந்தனர். அதேபோல் அதை சரியாக பொருத்தி எவ்வித சேதமும் இல்லாமல் அமைத்துள்ளனர். அதனால் தான் 6 நிலநடுக்கத்தை சந்தித்தாலும் படிமானம் இல்லாமல் கூட தாங்கி நிற்கிறது. ராஜ ராஜ சோழன் தனது காலத்தில் 5000 அணைகளை கட்டினார். தண்ணீருக்காக அமைச்சகத்தை உருவாக்கினார்.

இன்னும் ஏராளமான விஷயங்களை செய்தார். இவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இவை அனைத்தும் 9-ம் நூற்றாண்டில் நடந்தது. உலகமே நம் முன்னோர்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. நம்மிடம் தான் பெரிய கடல்வழித்தடங்கள் உள்ளன.தென்னிந்தியா வட இந்தியா என்று இல்லாமல் நாம் அனைவரும் இந்தியர்கள் என்றுதான் பெருமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ponniyin selvan promotion vikram say about thanjai temple in mumbai