இத்தாலிய நடிகையான மோனிகா பெலூச்சி பெயரில் தொடங்கும் கூலி படத்தின் பாடல் தற்போது வரை 68 மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ''கூலி'' படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க அனிருத் இசைமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூலி படம் வருகிற 14-ம் தேதி முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
Advertisment
கூலி படத்தில் சத்யராஜ், சௌபின் சாகிர், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில், ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், கூலி படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலில் பூஜா ஹெக்டே, சௌபின் ஷாஹிர் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பாடலை வைத்து பலரும் ரீல்ஸ் வீடியோ போட்டு இணைய பக்கங்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். தற்போது வரை இப்பாடல் 68 மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், 'கூலி' படத்தின் 'மோனிகா' பாடலை ஹாலிவுட் நடிகை மோனிகா பெலூச்சி பார்த்தார் என்று நேர்காணல் ஒன்றில் பேட்டி எடுத்தவர் பூஜா ஹெக்டேவிடம் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, "'மோனிகா' பாடல் மோனிகா பெலூச்சிக்கு பிடித்திருக்கிறது என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு கிடைத்த பாராட்டுகளிலேயே இது மிகப் பெரியது. நிறைய தமிழ் ரசிகர்கள் மோனிகா பெலூச்சியின் இன்ஸ்டா பதிவுகளில் கூலி படத்தின் மோனிகா பாடலை பார்க்குமாறு கமெண்ட் செய்து வந்தனர்" என்று அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இத்தாலியைச் சேர்ந்த மோனிகா பெலூச்சி நடிகை மற்றும் மாடலாக அறியப்பட்டவர். 2000 ஆம் ஆண்டில் அவர் நடித்த மலேனா படம் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. 60 வயதான அவர் இதுவரை 55 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.