‘பிக்கப் டிராப்’ படத்தில் நடிகை வனிதாவுக்கு ‘வைரல் ஸ்டார்’ பட்டம் கொடுத்தது தான் இல்லை என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அவருக்கு இந்த பட்டத்தை யார் அளித்தது என்பதை தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் என்றால் சர்ச்சை என்கிற அளவுக்கு அவருடைய வெளிப்படையான இயல்பால் அவருடைய கருத்துகள் சமூக ஊடகங்களில் சர்ச்சையாகின்றன. சினிமா தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா மகள் வனிதா சந்திரலேகா படத்தில் நடிகர் விஜய் உடன் ஜோடியாக அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடித்த வனிதாவுக்கு சினிமா வாய்ப்புகள் வராததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய திருமண வாழ்க்கையும் விரைவில் முடிவுக்கு வந்தது. நடிகை வனிதாவின் 2வது திருமணமும் முடிவுக்கு வந்தது. 2 பெண் குழந்தைகளுக்கு தாயாக தனியாக வசித்து வந்த வனிதாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மீண்டும் ஒரு வாசலைத் திறந்தது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வனிதா விஜயகுமார், தனது வெளிப்படையான தைரியமான இயல்பால் சர்ச்சையானார். இதையடுத்து, அவர் பீட்டல் பால் என்ற சினிமா தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிபவருடன் திருமணம் செய்துகொண்டார். அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால் சர்ச்சையானது. ஆனால், வனிதா – பீட்டர் பால் இவரும் விரைவிலேயே பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து, வனிதா, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றார். பின்னர், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறினார். இதனிடையே, ஜோதிடர் ஒருவர், வனிதா 4 வது திருமணம் செய்துகொள்வார் அவருடைய பெயர் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில்தான், வனிதா விஜயகுமாரும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலை மாற்றிக்கொண்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இருவரும் திருமணம் செய்துகொண்டதாக பலரும் வாழுத்து தெரிவித்தனர். ஆனால், வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருவரும் சேர்ந்து நடிக்கிற பிக்கப் டிராப் படத்துக்காக எடுத்த போட்டோ என்று விளக்கம் அளித்தனர்.
பிக்கப் டிராப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக நடிக்கும் வனிதாவுக்கு இந்த படத்தில் வைரல் ஸ்டார் என்று பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை யார் கொடுத்தது என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில்தான், 2 நாட்களுக்கு முன்பு பிக்கப் டிராப் படத்தின் படப்பிடிப்பு பூஜை நடந்தது. இதில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசனிடம், பத்திரிகையாளர்கள், வனிதாவுக்கு யார் வைரல் ஸ்டார் பட்டம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பவர் ஸ்டார் சீனிவாசன், அந்த பட்டத்தை தான் கொடுக்கவில்லை என்று கூறினார்.
பவர் ஸ்டார் சீனிவாசன், அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: “ஒரு போஸ்டர் போட்டவுடன் பயங்கர வைரலா பறக்குதுனு சொல்லுவாங்க. எங்கெங்கோ இருந்து போன் வருது. என்னுடைய தயாரிப்பாளர் ஒரு போன் பண்ணி, நாம ஒரு படம் பண்ணலாமனு கேட்டார். ஆனால், சம்பளமே கேட்கக் கூடாதுனு சொன்னார். நான் அது எப்படி தம்பி சம்பளம் இல்லாம நடிக்கிறது என்று கேட்டேன். இல்லை அண்ணே நான் பண்ணித் தர்றேன் என்று சொன்னார். சரி படத்துக்கு என்று என்ன பெயர் வைக்கலாம் என்றார். 2-3 பெயர் சொன்னார். நான் ‘பிக்கப்’ என்று பெயர் வைக்கலாமான்னு கேட்டேன். அவரும் அது நல்லா இருக்கும் வைச்சுடலாம் என்று சொன்னார். அப்போ அவர் யாரு ஹீரோயினா போடலாம்னு கேட்டார். நான் வனிதாவை ஹீரோயினா போடலாமான்னு கேட்டேன். அவரும் அவரை ஹீரோயினா போடலாம். பாப்புலரா வைரலா போகும்னு சொன்னார். அப்புறம், நாங்க போட்டோ எடுத்து போட்டோம். போட்ட உடனே நான் நினைச்சுகூட பார்க்கல, இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு நினைக்கல. இந்த படம் ஒரு பெரிய காமெடி சப்ஜெக்ட். இந்த படத்துல நான் டைரக்ட் பண்றேன். மியூஸிக் பண்றேன். இது எனக்கு நூறாவது படம். பெரிய பெரிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ரொம்ப ஆர்வமா எங்கிட்ட கேட்டாங்க. சார் நீங்க கல்யாணம் பண்ணீட்டீங்களா இல்லையானு கேட்டாங்க. சார் இப்ப நாங்க முன்னாடியே சொல்லகூடாது. வனிதா வருவாங்க, அப்ப அவங்க வாயலயே சொல்லுவாங்க சார்னு சொன்னேன்.” என்று கூறினார். அப்போது மேடையில் இருந்த நடிகை வனிதா விஜயகுமார் குறுக்கிட்டு, ஒரு ஜோதிடர், வனிதாவின் 4வது திருமணம் நடக்கும் என்றும் அவருடைய பெயர் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் என்றும் கூறினார். அதுலதான் பிரச்னையே. அந்த எஸ் தான் இந்த எஸ் என்று நினைத்துவிட்டார்கள் என்று கூறினார்.
இதைக்கேட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், “அப்படி அமைஞ்சா ஆண்டவனுடைய கையில இருக்குது. நம்ம கையில எதுவுமே இல்லை” என்று கூறி சிரித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த படம் ரொம்ப பிரம்மாண்டமா பொருட் செலவில் எடுக்கப்படுகிறது. கண்டிப்பாக உங்களுடைய ஆதரவு வேண்டும். பிக்கப் படத்தை தமிழக மக்கள் எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்க ஒரு நடிகர், நடிகை என்ற முறையில் போட்டோ எடுத்தோம். ஆனால், அது இந்த அளவுக்கு பரவும் என்று நினைக்கல. உண்மையிலேயே 10 பேர் வாழ்த்தினால் அந்த வாழ்த்து பளித்தால் நான் வரவேற்கிறேன். என்னுடைய லத்திகா படம் 350 நாள் ஓடியது. அது ஓடியதா இல்லை ஓடவைச்சோமான்னு தெரியும். கண்டிப்பா இந்த படத்தையும் ஓட வைப்போம். இந்த படத்தில வனிதா நடிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குது.” என்று கூறினார்.
அப்போது, பத்திரிகையாளர்கள், வனிதாவுக்கு வைரல் ஸ்டார்னு ஒரு பட்டம் கொடுத்திருக்கீங்களே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு உடனடியாக பதிலளித்த பவர் ஸ்டார் சீனிவாசன், நான் கொடுக்கல சார். அது தயாரிப்பாளர் ஆசைப்பட்டது. நான் டைரக்ஷன் பண்றேன். இந்த ஸ்டார் பட்டம் கொடுக்கிறது எல்லாம் புரொடியுசர் பார்த்துக்கொண்டார்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“