பிரபாஸ் கீர்த்தி சனோன் சையப் அலிகான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் 2-வது நாளில் பெற்ற வசூல் நிலவரம் குறித்து வெளியான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இந்தி மற்றும் தெலுங்கில் தயாரான படம் ஆதிபுருஷ். பிரபாஸ், கீர்த்தி சனோன், சையப் அலிகான் ஆனகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ள ஆதிபுருஷ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ஜூன் 16-ந் தேதி வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியான ஆதிபுருஷ் இரண்டாம் நாளில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இந்தி பாக்ஸ் ஆபிஸிலும் இரண்டு நாட்களில் ரூ 37 கோடி வசூல் செய்து ஆதிபுருஷ் சிறப்பாக வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் தெலுங்கு மாநிலங்களில் ஆதிபுருஷின் இரண்டாம் நாள் வசூல் ரூ.26 கோடியை கடந்துள்ளது. ஆதிபுருஷ் படம் வெளியான நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் டயலாக்குகளுக்காக நிறைய விமர்சனங்களையும் ட்ரோல்களையும் எதிர்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக சத்தீஸ்கரின் மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தில் படத்தை திரையிடுவதற்கு தேசிய அளவில் தடை விதிக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், படம் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து டி-சீரிஸ் அறிவிப்பின்படி, அதிபுருஷ் உலகளவில் மொத்தமாக இரண்டு நாளில் ரூ 100 கோடி வசூலித்துள்ளது.
இதன் மூலம் இந்த படம் 2 நாட்களில் உலகளவில் ரூ 240 கோடி வசூலித்துள்ளது. பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் இரண்டு நாளில் ரூ.219 வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவல் வெளியான படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ஆதிபுருஷ் உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் அடிப்படையில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ரூ.222 கோடியுடன் ஆர்ஆர்ஆர், ரூ.214 கோடியுடன் பாகுபலி 2: தி கன்க்ளூஷன், ரூ.164.5 கோடியுடன் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 ஆகியவை பட்டியலில் முதல் மூன்று படங்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“