/indian-express-tamil/media/media_files/2025/07/16/why-blood-same-blood-2025-07-16-08-25-36.jpg)
'வொய் பிளட்.. சேம் பிளட்'... 21 வருடங்களுக்கு பிறகு இணைந்த பிரவுதேவா-வடிவேலு கூட்டணி!
தமிழ் சினிமாவில் ஹீரோ-ஹீரோயின் காம்போவை கடந்து ’கவுண்டமணி - சத்திய ராஜ், வடிவேலு - பார்த்திபன், கவுண்டமணி - கார்த்திக்’ என பல கதாநாயகன் - காமெடியன் காம்போவானது ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம்வந்துள்ளது. அப்படி, பிரபுதேவா-வடிவேலு தமிழ் திரையுலகில் இந்த 2 துருவங்களும் இணைந்து உருவாக்கிய நகைச்சுவை காவியங்கள் காலத்தால் அழியாதவை. நடனத்தில் மின்னல் வேகமும், நடிப்பில் துள்ளலும் காட்டும் பிரபுதேவா, தன்னுடைய உடல்மொழியாலும், வசன உச்சரிப்பாலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைகைப் புயல் வடிவேலுவும் இணைந்தால் என்ன நடக்கும்? திரையரங்குகள் சிரிப்பால் அதிர்ந்து போகும், ரசிகர்கள் ஆனந்த கூத்தாடுவார்கள். இதுதான் இந்த வெற்றிக் கூட்டணியின் ரகசியம்.
90-களில் 'காதலன்' படத்தின் மூலம் தொடங்கிய இந்த நகைச்சுவைப் பயணம், இன்று வரை பல மைல்கற்களை எட்டியுள்ளது. 'மிஸ்டர் ரோமியோ'வில் வரும் கிண்டலான வசனங்களும், 'மனதை திருடிவிட்டாய்' படத்தின் புகழ்பெற்ற "சிங் இன் தி ரெயின்" காட்சியும், 'எங்கள் அண்ணா'வில் இருவரின் அலப்பறைகளும், 'போக்கிரி'யில் வடிவேலுவின் ஒவ்வொரு அசைவும் நம் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்தவை.
காதலன், எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், மிஸ்டர் ரோமியோ போன்ற படங்களில் கலகலப்பான படங்களில் பிரபுதேவாவும் வடிவேலும் இணைந்து நடித்தனர். மேலும் பிரபுதேவா இயங்கிய போக்கிரி, வில்லு படங்களிலும் வடிவேலு காமெடியில் பட்டைய கிளப்பி இருப்பார். ஒருகட்டத்திற்கு பின்னர் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை டார்லிங், 100, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இதனை துபாய் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி என்பவர் தயாரிக்கிறார். விரைவில் இதன் அறிவிப்பு வெளியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.