சினிமாவில் இருந்து விலகுவதாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்ட நிலையில், அவரின் பதிவு தொடர்பான் ஸ்கிரீன்ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.
2013-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான நேரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், நடிகர் நிவின் பாலி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அல்போன்ஸ் – நிவின் கூட்டணியில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் தமிழநாட்டிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தின் மூலம் அல்போன்ஸ் புத்திரன் கவனிக்கப்படும் இயக்குனராக மாறிய நிலையில், பிரேமம் படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றியை பெற்றது. அதன்பிறகு ப்ரித்விராஜ் – நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற படத்தை இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் கலவையளான விமர்சனங்களை பெற்றிருந்தது.
தற்போது தமிழில் கிஃப்ட் என்ற படத்தை இயக்கி வரும் அல்போன்ஸ் புத்திரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது திரையுலக வாழ்க்கையை நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதை நேற்றுதான் தெரிந்துகொண்டேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. அடுத்து குறைந்தபட்சம் ஒடிடி அளவிலான குறும்படங்கள் மற்றும் பாடல் வீடியோக்களை தொடர்ந்து இயக்குவேன்.
நான் சினிமாவில் இருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல் பலவீனமாகவோ அல்லது கணிக்க முடியாதவையாகவோ இருக்கும்போது வாழ்க்கை இன்ட்ரவல் பஞ்ச் போல் திருப்பத்தை கொடுத்துவிடுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
அல்போன்ஸ் புத்திரனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து அவர் தனது பதிவை டெலிட் செய்துவிட்டார். ஆனாலும் அவரது பதிவு தொடர்பான ஸ்கிரீஸ்ஷாட்டை வைரலாக்கி வரும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“