scorecardresearch

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சர்சைக்குள்ளான தனியார் பள்ளி ஏ.ஆர்.ரஹ்மானை அவமதித்ததா?

அந்த வீடியோவில் ஏ.ரஹ்மான் கூறியிருப்பதாவது: “பள்ளியில் எனக்கு ஒரு பெரிய அவமதிப்பு… அது உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தின் தெருக்களுக்கு போங்க… அவர்கள் உங்களுக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என்று சொன்னார்கள்” என்று கூறுகிறார்.

psbb school, ar rahman, ஏ ஆர் ரஹ்மான், ar rahman interview, பிஎஸ்பிபி பள்ளி, ar rahman video

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி) பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் கூற, அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகளும் ஆமாம் அந்த ஆசிரியர் அப்படித்தான் என்று ஆதரவாக குரல் கொடுக்க ஒரே நாளில் இந்த விவகாரம் பெரும் பூதாகரமானது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்தது. இதையடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் அதிராடியாக கைது செய்யப்பட்டார். தேசிய குழந்தைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் ஆணையம் உடனடியாக விசாரணை மேற்கொண்டது.

இதற்கு முன்பும் பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகள் ஆசிரியர்கள் மீது பாலியல் தொல்லை புகார்கள் கொடுத்தாலும் கண்டுகொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அந்த வரிசையில், அந்த பள்ளியில் சாதிய மேலாதிக்கம் இருந்தது என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

சமீப காலமாக பாஜக ஆதரவாளராக சமூக ஊடகங்களில் செயல்பட்டுவந்த மதுவந்தி பி.எஸ்.பி.பி பள்ளியின் பொருளாளராக உள்ள ஒய்.ஜி.மகேந்திரன் மகள் என்பதால், அவரும் இந்த விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டார். இதையடுத்து, மதுவந்தியும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், மதுவந்தி, “இது என் ஸ்கூல் தான். ஏனெனில் இது நான் படித்த பள்ளி, ஆனால் நான் நடத்துகிற பள்ளியல்ல. என்னை போல எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்திருக்கிறார்கள். தேர்வாகி வெளியே சென்றிருக்கிறார்கள். இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இது எங்க எல்லாருடைய பள்ளியும்தான். அதனால் இது ஒரு அசிங்கமான விஷயம். இதற்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தோ எனக்கும் என் தந்தைக்கும் கிடையாது. இதைதான் நாங்கள் சொல்லவே சொல்லியிருக்கிறோம்.

இதில ஜாதி, மதம், இனம் பிராமணியம், சத்ரியா, வைஷியா, சூத்ரா, ஹிந்து, முஸ்ஸீம், கிறிஸ்தவம், ஜைணம், சீக்கியம் இந்த மாதிரி தப்பான அரசியலை தயவுசெய்து புகுத்தி விளையாடாதீர்கள். அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்வது, இதில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்குறீர்களோ அதுக்கு முழு ஒத்துழைப்பு எங்கள் குடும்பத்தின் சார்பாக நாங்கள் கண்டிப்பாக கொடுப்போம். நாங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டிதான் கேட்டிருக்கோம். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில்தான், ஏ.ஆர்.ரஹ்மான் தனது பள்ளிக் காலத்தில் அவமதிக்கப்பட்டதை ஒரு நேர்காணலில் கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. ஏனென்றால், ஏ.ஆர்.ரஹ்மான் பி.எஸ்.பி.பி பள்ளியில் படித்தவர் என்பதால் அந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இசைய்ப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகமே கொண்டாடுகிற இசையமைப்பாளராக உள்ளார். 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

2012ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது நாயகன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரபல பத்திரிக்கையாளர் சிமி கார்வால் நேர்காணல் செய்தார். அந்த வீடியோவில், ஏ.ஆர்.ரஹ்மான், தனது தந்தை மறைவுக்கு பிறகு இளம் வயதில் தான் சந்தித்த வறுமை பற்றி பேசியுள்ளார். அடிக்கடி பள்ளிக்கு லீவ் போட்டதால், ஆசிரியர்கள் பெற்றோரை அழைத்து கொண்டு வருமாறு கூறினார்கள். ஃபீஸ் கட்ட முடியாததால் அவர் அந்த ஸ்கூலில் இருந்து பாதியிலே படிப்பை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ஏ.ரஹ்மான் கூறியிருப்பதாவது: “பள்ளியில் எனக்கு ஒரு பெரிய அவமதிப்பு… அது உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தின் தெருக்களுக்கு போங்க… அவர்கள் உங்களுக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என்று சொன்னார்கள்” என்று அந்த வீடியோவில் ஏஆர் ரஹ்மான் கூறுகிறார். ஆனால், அதில் எந்த பள்ளி என்று பெயரைக் குறிப்பிடவில்லை.

ஆனாலும், சமூக ஊடகங்களில் பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் படித்தது பி.எஸ்.பி.பி பள்ளி என்றும் அந்த பள்ளிதான் ஃபீஸ் கட்ட முடியாவிட்டால், உங்கள் மகனை அழைத்துக்கொண்டு கோடம்பாக்கம் தெருக்களுக்கு போங்க… அவர்கள் உங்களுக்கு ஏதாவது பணம் போடுவார்கள்” என்று கூறியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதோடு, ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் வீடியோவையும் பகிர்ந்திருந்தனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் பி.எஸ்.பி.பி பள்ளியில்தான் படித்தாரா என்ற கேள்வி எழுகிறபோது, ஏ.ஆர்.ரஹ்மான் நேர்காணல் வீடியோவுடன் மதுவந்தியின் ஒரு வீடியோ கிளிப்பும் வைரலானது. அதில், மதுவந்தி, “ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் இருந்து இடையில் நின்றவர். அவர் இன்று எங்கே இருக்கிறார்” என்று தனது பள்ளியின் பெருமையைக் கூறுகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மாணவனாக பள்ளியில் படிக்கும்போது தன்னை அவமதித்த பள்ளியின் பெயரை சொல்லவிலை என்றாலும் அது பத்ம சேஷாத்ரி பள்ளி என்பதை மதுவந்தி கூறுகிறார்.

பத்ம சேஷாத்ரி பள்ளி மீது சாதி ரீதியான விமர்சனங்கள் குறித்தும் அப்பள்ளி ஏ.ஆர்.ரஹ்மானை அவமதித்தது குறித்தும் சினிமா எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “ரஹ்மான் பள்ளி விவகாரம் தொடர்பாக:

“உங்கள் மகனை கோடம்பாக்கம் தெருக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். பணம் தருவார்கள். பள்ளிக்கு அழைத்து வர வேண்டாம்” என்று தன்னுடைய பள்ளிக்காலத்தில் சொல்லப்பட்டதாக , சிமி கரேவாலுக்கு தரும் நேர்காணலில் சிறிய கசப்புடன் நினைவுகூர்கிறார் ரஹ்மான். அதைக் கூட புகார் தொனியில் அல்லாமல் மெல்லிய சிரிப்போடு சொல்வதுதான் சுவாரசியம்.
ஆனால் இன்னமும் புகழும் செல்வாக்கும் வளர்ந்த பிறகு ரஹ்மானின் மனமுதிர்ச்சியும் அதற்கேற்ப வளர்கிறது.

எனவேதான், ‘பள்ளி உன்னை நடத்திய விதம் சரியில்லை’ என்று பால்ய நண்பன் பிற்காலத்தில் சொல்லும் போது, “பள்ளி குறித்தான இனிமையான விஷயங்களை மட்டுமே நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சிதராத விஷயங்களை அல்ல” என்று சொல்வதில் அவருடைய பெருந்தன்மையின் அகலமும் ஆழமும் தெரிகிறது.

“என் முன்னால் அன்பு, வெறுப்பு ஆகிய இருவழிகள் உள்ளன. நான் அன்பையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்” என்று ஆஸ்கர் விருது ஏற்புரையில் ரஹ்மான் சொன்னதையும் இதனோடு பொருத்திப் பார்க்கலாம்.
*
சிமி கரேவாலுக்கு தந்த நேர்காணல் இளமைக்கால ரஹ்மானிடமிருந்து வெளிப்பட்ட சிறிய முனகல். தான் கடந்து வந்த பாதையில் உள்ள வலிகளை தன்னிச்சையான வேதனையுடன் சொல்லும் தொனி மட்டுமே அதில் தெரிகிறது. புகாராக அல்ல.

இது ஏதோ கிசுகிசு போல் அல்லாமல் ரஹ்மானின் வாயாலேயே சொல்லப்படும் போது அதில் உண்மையிருக்கும் சாத்தியமே அதிகம் வருகிறது.

ஆனால், அவர் வளர வளர தன் கடந்த கால வலிகளையெல்லாம் புன்னகையோடு கடக்கிறார். ‘தற்கொலை குறித்து நான் நிறைய யோசித்திருக்கிறேன்’ என்று நினைவுகூர்வதும் இப்படித்தான்.
Notes of a Dream நூலில், சிமி கரேவால் நேர்காணலில் சொல்லப்பட்ட விஷயம் கூட இல்லை. அது தவிர்க்கப்பட்டிருக்கிறது.

சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த நூலில் உள்ளது இதுதான் (நினைவில் இருந்து)
ரஹ்மானின் தந்தை இறந்த பிறகு குடும்பம் வறுமையில் வீழ்வதால் அதை சுமக்க வேண்டிய பொறுப்பு ரஹ்மானுக்கு ஏற்படுகிறது. எனவே அதிக அளவில் இசை தொடர்பாக அலைய வேண்டியிருக்கிறது. இசை மீதுள்ள ஆர்வமும் கூடுதல் காரணம். எனவே அதிகம் பள்ளிக்கு அதிகம் மட்டம் போட நேர்வதால் பள்ளி நிர்வாகம் கண்டித்திருக்கிறது’ என்கிற விஷயத்தை மட்டுமே அந்த நூலில் பகிர்கிறார்.

*
பள்ளிக்கட்டணம் கட்டவில்லையென்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களையும் பெற்றோர்களையும் இகழ்வாக நடத்துவது, அவமதிப்பது என்பது எந்தவொரு தனியார் பள்ளியும் வழக்கமாக செய்வதுதான். ஏனெனில் அதன் பிரதான நோக்கம் வணிகம்தான்.

எனவே இதை குறிப்பிட்ட சாதி, மதம் சார்ந்து இணைத்து கிண்டலடிப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பணத்திற்கு முன்னால் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம். அது எந்தவொரு மதப்பின்னணி உள்ள பள்ளிக்கூடமென்றாலும் இதுதான் விஷயம். கட்டணம் கட்டவில்லையென்றால் அவமதிப்பார்கள். எனவே இதை வைத்து கும்மியடிக்க வேண்டாம்.
ஆனால் ஒரு மாணவனின் தனிப்பட்ட பின்னணியைப் புரிந்து கொண்டு தனியார் பள்ளிகள் சற்று கருணை காட்டலாம். கட்டணம் தருவதற்கு அவகாசம் தரலாம். நிச்சயம் இந்த விஷயம் விமர்சிக்கப்பட வேண்டியது.தன் பள்ளியில் படித்த மாணவனை ஒரு காலத்தில் இகழ்ந்து விட்டு பிறகு அவன் புகழ் அடைந்த பிறகு வெட்கமேயில்லாமல் ‘அவன் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவன்’ என்று கிரெடிட் கோருவதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறில்லை.

உண்மையில் இந்த விவகாரத்தில் ரஹ்மானின் பெருந்தன்மையையும் மனமுதிர்ச்சியையுமே பிரதானமாக நான் அடிக்கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
‘நல்ல விஷயங்களை மட்டுமே நான் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன்’ என்று ஒருவர் தொடர்ந்து சொல்வதற்கும் அதை செயலில் நிரூபிப்பதற்கும் கடக்க வேண்டிய பாதை என்பது பெரியது.
ஒன்று ரஹ்மானின் இந்த குணாதிசயத்தை நாமும் பின்பற்ற முயலலாம். அல்லது குறைந்தபட்சம், இந்த விவகாரத்தில் அவரையும் இழுத்துப் போட்டு கும்மியடிக்கும் அற்பத்தனத்தையாவது செய்யாமல் இருக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Private school abused ar rahman really what happens