'பாரம்' படத்தை பார்த்துவிட்டு அதன் மதிப்பை திரையுலகம் எடைபோடட்டும்

பாரமும் தமிழ் படம் தான். அதில் உழைத்தவர்கள் அனைவரும் தமிழ் சினிமாத்துறையினர் தான். தேசிய விருது அவர்களுக்குமானது - ப்ரியா கிருஷ்ணசாமி

Tanushree Ghosh

எடிட்டிங்கில் இருந்து டாக்குமெண்ட்ரி படங்கள் இயக்குவதற்கு நீங்கள் உங்களை எப்படி தயார் செய்து கொண்டீர்கள்? உங்களுக்கு எது அதிக திருப்த்தி அளிக்கின்றது?

Priya Krishnaswamy talks about Baaram movie : எனக்கு ஒரு படத்தை இயக்கவும் ,அதனை எடிட் செய்யவும் பிடித்திருக்கிறது. இரண்டு உலகங்களின் எல்லையை இதனால் அறிந்து கொள்ளலாம். ஆனால் எடிட்டிங் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். பொறுமை, உள்ளுணர்வு, சாய்ஸ் மேக்கிங் என அனைத்தையும் கற்றுத் தரும் எடிட்டிங் எனக்கு எழுதவும் கற்றுக் கொடுத்தது.

இதற்கு முன்பு சரிதா ஜோஷியை வைத்து கங்குபாய் படம் எடுத்தீர்கள், தற்போது தலைக்கூத்தல் என்ற படம் எடுத்துள்ளீர்கள். இரண்டுமே வயதானவர்களின் வாழ்வியலை சுற்றி நடக்கும் நிகழ்வுகள். உங்களுக்கு ஏன் இதில் ஆர்வம்?

நான் மிகவும் அருமையான அன்புமிக்க தாத்தா – பாட்டியால் செகந்தராபாத்தில் வளர்க்கப்பட்டேன். எனக்கு ராமாயணமும், மகாபாரதமும் கற்றுத் தந்தவர்கள். நான் ஒரு நாளைக்கு அதிக அளவு உணவு உட்கொள்பவள். ஒரு வேளை உணவுக்கு ஒரு கதை என்பது தான் எங்களுக்குள் போட்டுக் கொள்ளப்பட்ட டீல். அதனால் என் அத்தைகளும், தாத்தா பாட்டியும் எனக்கு நிறைய நிறைய கதைகளை சொல்லி வளர்த்திருக்கின்றார்கள். அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேசனாக இருந்திருக்கின்றார்கள் அல்லது எச்சரிக்கையாக இருந்திருக்கின்றார்கள். எது எப்படியோ, அவர்களுக்கு நன்றியுடையவளாகவும், மரியாதை செலுத்துபவளாகவும் என்றும் இருப்பேன்.

பாரம் எப்படி ஒரு ஆவணப்படமாக உருவானது?

”தி கில்லிங்” என்ற பெயரில் தான் ஆரம்பத்தில் உருவானது. ஆவணப்படமாக இருந்தால் தான் இது போன்ற முக்கிய கதைக்கரு நிலைத்திருக்கும் என்று நினைத்தேன். ஒரு முழுப்படம் எடுக்கும் அளவிற்கு கதாப்பாத்திரங்களும், இடங்களும் தேவைப்பட்டன. இதர சினிமாப்படங்கள் போல மக்கள் மத்தியில் ஆவணப்படங்கள் ரீச் ஆவதில்லை. ஆனால் இரண்டு வருட உழைப்பிற்கு பிறகு, நிதி பெறும் அளவுக்கு இப்படம் உயர்ந்தது.

தலைக்கூத்தல் குறித்த முன்பு நீங்கள் அறிந்ததுண்டா?

அதுகுறித்து நான் அறிந்ததில்லை. அது குறித்து அறிந்த பின்புதான் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்தியாவில் பெருமளவு இது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அது குறித்து யாரும் கவலைப்பட யோசிக்கவும் இல்லை. இந்தியாவில் 60 சதவீதத்திற்கும் மேலான வயதானவர்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் வாடி வருகின்றனர்.

தலைக்கூத்தல் இந்தியாவில் எந்த அளவுக்கு பரவியுள்ளது? எத்தனை ஆண்டு காலமாக இவ்வாறு செய்து வருகின்றனர்?

இந்தியாவின் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்த தலைக்கூத்தல் முறையை தேர்வு செய்து வயதில் பெரியவர்களை கொலை செய்துள்ளனர்.  ஆனால் தற்போது இருக்கும் தலைக்கூத்தல் முறையைப்  போல் அன்று  பின்பற்றப் படவில்லை.  இது எவ்வளவு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. சிலர் பிரிட்டிஷ் காலத்திற்கு பின்புதான் என்கிறார்கள். சில கடந்த 100 ஆண்டுகளாக தான் என்கிறார்கள்.  பலரும் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பாக என்கிறார்கள். மேலும் சிலர் கடந்த முப்பது வருடங்களாக தான் இந்த முறையை பின்பற்றி வருவதாகவும் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். இன்றோ இது குறித்து தற்போது ஆராய்ச்சிகள் மற்றும் படிப்புகளும் மாணவர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து நீங்கள் அறிந்து கொண்டது என்னன்ன?

2012ஆம் ஆண்டு தலைக்கூத்தல் குறித்து இணையங்களில் அதிகம் தெரிந்து கொண்டேன். பின்பு ஒரு இளைஞர் தனக்கு அரசு வேலை வேண்டும் என தன் அப்பாவையே கொலை செய்தது தெரியவந்தது. அமீர்கானின் சத்தியமேவ ஜெயதே  நிகழ்ச்சியை பார்த்த பின்பு இது குறித்து அதிகம் அறிந்து கொண்டேன். தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்திற்கு சென்று இது குறித்து மிகவும் கவனமாக ஆய்வுகளை மேற்கொண்டேன். மக்களிடம் இது குறித்து பேசினேன். அந்தப் பயணம் எனக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து தலைக்கூத்தல் செய்து வந்த சிலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.  60 வயது மிக்க ஒரு பெண்மணியை நான் சந்தித்தேன். தலைக்கூத்தல் குறித்து அவர்,  அவர் அம்மாவிடம் கற்றுக்கொண்டார். அவர், அவருடைய அம்மாவிடம் கற்றுக்கொண்டார். தலைமுறை தலைமுறையாக இவ்வாறு தலைக்கூத்தல் முறை பின்பற்றப்பட்டது.  நான் சந்தித்த 60 வயது மிக்க பெண் இறுதியாக தன் அம்மாவிற்கு தலைக்கூத்தல் செய்தார்.  ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால் அவருடைய அம்மா பிழைத்துக் கொண்டார். தற்போது தன் மகளுடன் சேர்ந்து வாழ்கிறார் …

தலைக்கூத்தலில் முதலில் கொல்லப்படுவது வயதான ஆண்கள் தான். அவர்களுக்கு சமைக்கவோ குழந்தைகளை பராமரிக்கும் பணிகளோ செய்யத் தெரியாத காரணத்தால் அவர்களைத்தான் முதலில் தலைக்கூத்தல் முறையில் கொல்கின்றனர். வயதான பெரிய ஆண்களை கவனித்துக் கொள்வதில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சிரமம் இருப்பதும் மிக முக்கியமான காரணமாக கருதுகின்றனர்.

ஆண்கள் தங்களின் பெற்றவர்களுக்கும் முதலில் தலைக்கூத்தல் செய்கின்றனர். பின்பு அவர்களுடைய மனைவிகள் அப்பெரியவர்களுக்கு தலைக்கூத்தல் செய்கின்றனர். என்னுடைய யூனிட்டில் வேலை பார்த்தவர்கள் பலரும் இது போன்ற அனுபவத்தை கேள்வி பெற்றுள்ளனர். ஆனால் இதனை படமாக எடுப்பார்கள் என்று ஒரு போதும் அவர்கள் நினைத்தது இல்லையாம்.

இந்த நேர்காணலை நீங்கள் ஆங்கிலத்தில் படிக்க

ஆர். ராஜு கருப்புசாமியாக நடித்தது குறித்து?

நடிப்பு என்பது ஒரு இசை போல அதற்கான தளத்தினை இயக்குனர் உருவாக்கிக் கொடுத்து விடுகிறார். தியேட்டர் அல்லது மெலோட்ராமாவாக இல்லாமல் இயல்பாக நடிக்கும் ஒருவர் எனக்கு தேவைப்பட்டார். இந்த கதாபாத்திரங்களில் இவர்கள் தான் நடிக்க வேண்டுமென முடிவு செய்யவே எங்களுக்கு ஐந்து மாதங்கள் தேவைப்பட்டது.  பின்பு டெல்லியில் (National School of Drama, New Delhi) இருந்து வந்த ஆர். ராஜு மிகவும் இயல்பாக இந்த கதாபாத்திரத்துக்கு புரிந்து வந்தார் முதல்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கதாப்பாத்திரங்களில் பொருந்திச் செல்லாமல் போன காட்சிகள் மற்ற நடிகர்களை வைத்து திருநெல்வேலியில் மீண்டும் படமாக்கினோம். நடிப்பு என்பது மிகவும் முக்கியம். அதில் சமரசம் செய்து கொள்ளவே கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன்.

2004-ம் ஆண்டு ஏற்கனவே தேசிய விருது (for the documentary The Eye of the Fish – the Kalaris of Kerala) பெற்றீர்கள்.  தற்போது பெற்றிருக்கும் தேசிய விருது குறித்து உங்களின் கருத்து

தேசிய விருது என்பது இந்நாட்டின் மிக உயரிய விருது.  இதனை பெற்றது எங்களின் யூனிட்டிற்கு மிகப்பெரிய கவுரவம். தலைக்கூத்தல் முறையில் பலியான நூற்றுக்கணக்கான முதியவர்களுக்கு இது சமர்ப்பணம். இப்படத்திற்கு தேசிய கிடைத்ததன் மூலம் இந்த விவகாரம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும்.  வருங்காலத்தில் இம்முறை ஒழிக்கப்படும் என்று நம்புகின்றேன்.

கடந்த ஆண்டு தேசிய விருது பெற்ற டூ லெட் படத்தினைப் போன்றே உங்களின் படம் குறித்தும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. 2017ம் ஆண்டு படம் முழுமை பெற்ற பின்பும் ஏன் வெளியிடப்படவில்லை. ஒரு டீசர், ட்ரெய்லர் கூட இல்லாதது ஏன்?

இந்த படம் இந்தியாவின் சர்வதேச திரைப்படவிழாவில், இந்தியன் பனோரமா செக்சனில் திரையிடப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த 22 படங்கள் மட்டுமே இங்கு திரையிடப்பட்டது. இந்த விழாவில் திரைப்படங்களை திரையிடுவது என்பது மிகவும் சவாலான காரியம். ICFT-Unesco Gandhi Medal – விருது பெறுவதற்காக நாமினேட் செய்யப்பட்ட இரண்டு இந்திய படங்களில் இதுவும் ஒன்று. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கிலும் இந்த படம் பல்வேறு விருதுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தமிழக மக்களும் இப்படத்தை பார்வையிட விரும்புகின்றனர். இப்படத்தின் ஆன்லைன் மற்றும் தியேட்டர் வெளியீடு குறித்து நாங்கள் ஆலோசனை செய்து வருகின்றோம்.

பாரம் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்து தமிழ் சினிமாத்துறை மகிழவில்லை. படம் வெளியாகாத நிலையில் இப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருதுகளில் இருந்து தமிழ் சினிமா ஓரங்கட்டப்படுகிறது என பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்ற முக்கிய திரை ஆளுமைகள் தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இது குறித்து உங்களுக்கு தெரியுமா?

நான் ட்விட்டரில் அவ்வளவு ஆக்டிவாக இல்லை. அதனால் தமிழ் திரையுலகத்தின் கருத்து குறித்து எனக்கு தெரியவில்லை. ரஜினியின் மிகப்பெரிய ரசிகை நான். 2017ம் ஆண்டு குரங்கு பொம்மையில் பாரதி ராஜாவின் நடிப்பாற்றலை கண்டு நான் பிரமிப்படைந்தேன். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இருந்து நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ஃபேன். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 96 மற்றும் செக்க சிவந்த வானம் என இரண்டு படங்களும் பிரமாதம். மம்முட்டியின் பேரன்பு படத்தையும் நான் ரசித்தேன். ஆனாலும் பாரமும் தமிழ் படம் தான். அதில் உழைத்தவர்கள் அனைவரும் தமிழ் சினிமாத்துறையில் இருந்து வந்தவர்கள் தான். தேசிய விருது அவர்களுக்குமானது. தமிழ் திரைப்படத் துறையினர் இப்படத்தை பார்த்துவிட்டு, இப்படம் தேசிய விருதுக்கு தகுதியானதா என்ற முடிவுக்கும் வரட்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close