Priya Mani: இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களால், ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. பின்னர் இயக்குநர் பாலு மகேந்திராவின், ’அது ஒரு கனா காலம்’ என்ற படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.
Advertisment
இருப்பினும் இயக்குநர் அமீர் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ திரைப்படம் தான், பிரியாமணியை பட்டி தொட்டி எங்கும் அறியச் செய்தது. அந்தப் படத்தில் பிரியாமணி ஏற்று நடித்திருந்த முத்தழகு என்ற கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரம், ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்தது. அதோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
அதனால் அடுத்தடுத்து, பிரியாமணியை தேடி பாவாடை தாவணி அணிந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரங்கள் வரத் தொடங்கின. மார்டன் லுக், கவர்ச்சி என வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்றிருந்தவருக்கு, இது ஏமாற்றத்தை அளித்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், அவரால் நினைத்த உயரத்தை அடைய முடியவில்லை. அதோடு பல ரியாலிட்டி ஷோக்களிலும் ஜட்ஜாக செயல்பட்டு வந்தார்.
2017-ல் முஸ்தபா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிரியாமணி, தற்போது சீரியலில் கால் பதித்துள்ளார். ஆனால் தொலைக்காட்சி தொடரில் அல்ல, வெப் சிரீஸில். இந்தியில், உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் கூட வெப் சிரீஸில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழிலும் சில நடிகர்கள் வெப் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அமேஸான், நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 போன்ற முக்கிய ஆப்களில் இவைகள் ஒளிபரப்பப் படுகின்றன.
பிரியாமணி நடிக்கும் வெப் சிரீஸுக்கு ‘த ஃபேமிலி மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் தீவிரவாத எதிர்ப்புப் படை வீரராக நடித்திருக்கும் மனோஜ் பாய்க்கு மனைவியாகவும், 2 குழந்தைகளுக்கு தாயாகவும் நடித்திருக்கிறார் பிரியாமணி. ஆக்ஷன் த்ரில்லராக இயக்கப்பட்டுள்ள இந்த சீரியல் மொத்தம் 10 எபிசோட்களைக் கொண்டுள்ளது. அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் இதனை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ராஜ் மற்றும் டி.கே இயக்கியிருப்பது குறிப்பிடத் தக்கது.