தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், தமிழில் ஏற்கெனவே வெற்றிபெற்ற சூது கவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய படங்களின் பார்ட் 2 திரைக்கதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் இயக்குனர் சி.வி.குமார். இவருடைய திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் அட்டகத்தி, பீட்சா, இறுதி சுற்று ஆகிய பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில், சூது கவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய 3 படங்களின் பார்ட் 2 தயாரிப்பதை தெரிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் எண்டர்டெயிண்மென்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “சூது கவ்வும் 2, தெகிடி 2, மாயவன் 2 ஆகிய மூன்று படங்களின் திரைக்கதை பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இது பற்றி அனைத்து விவரங்களும் விரைவில் தெரிவிக்கப்படும். உங்களுடைய பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த படங்களின் பார்ட் 2 படங்களில் எந்த படத்தை நீங்கள் திரையில் காண விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி ரசிகர்களின் விருப்பத்தை கேட்டுள்ளனர். அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் சூது கவ்வும் பார்ட் 2 படத்தைக் காண விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
சூது கவ்வும் படம் ஒரு கிரைம் காமெடி படம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியானபோது ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.
2014-ம் ஆண்டு வெளியான தெகிடி ஒரு கிரைம் த்ரில்லர் படம். இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
சந்தீப் கிஷன் மற்றும் ஜாக்கி ஷேராஃப் நடித்த மாயவன் திரைப்படம் ஒரு அறிவியல் புனைகதை மர்மப் படம். இந்த புதிய வகை முயற்சி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த மூன்று படங்களின் பார்ட் 2 திரைக்கதைப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளதாக திருக்குமரன் எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த படங்களின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்த பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"