விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்காத நடிகர் வடிவேலு ஒரு நன்றி கெட்டவன் என்று திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அவ்வப்போது சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே. ராஜன், விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பங்கேற்காத நடிகர் வடிவேலு நன்றி கெட்டவன் என்று கடுமையாகப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களிடம் பேசியிருப்பதாவது: “அஜித்னு ஒரு நடிகர் இருக்கார், ஒரு ரசிகர்களையும் சந்திப்பதில்லை, மக்களைப் பார்ப்பதில்லை, பல கோடிகளை மட்டும் பார்க்கிறார், அப்படி ஒரு நடிகர் அப்படி இருக்கிறார். விஜய் ரசிகர்களை சந்திக்கிறார், பரிந்து தருகிறார், விருது வழங்குகிறார். அவர் அரசியலுக்காக இப்படிபட்ட நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார். இப்படி அவரவர் மனம்போன போக்கிலே பல நல்ல காரியங்களைச் செய்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வாழ்த்துச் சொன்னது நல்ல விஷயம்” என்று கூறினார்.
மறைந்த நடிகர் விஜயகாந்த் இறுதிச் சடங்கில் நடிகர் வடிவேலு பங்கேற்காதது குறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் கே. ராஜன், “வடிவேலு நன்றி கெட்டவன், வடிவேலுவுக்கு நன்றி என்று ஒன்று இருந்திருந்தால், விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருக்கலாம். இல்லை ஓரிருநாள் கழித்து சென்றிருக்கலாம். வடிவேலு சாலி கிராமத்தில் இங்கேதான் இருந்திருக்கிறார். ஆகவே இது அவருடைய நன்றி இல்லாத உள்ளத்தைக் காட்டுகிறது.” கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
நடிகர்கள் விஷால், சூர்யா வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்த் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. பின்னர், அவர்கள் சென்னை வந்த பிறகு, விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, கதறி அழுதனர். இது குறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் கே. ராஜன், “விஷால் வந்து கதறி அழுதார், சூர்யா வந்து கதறி அழுதார், அதுகூட சிலர் நடிப்பு என்றார்கள், இதையெல்லாம் நடிப்பாகப் பார்க்கக் கூடாது” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“