பூஜைக்கு போஸ்டர் அடித்த முதல் படம்; பட ரிலீஸில் கேப்டனுக்கு சிலை வைத்த தயாரிப்பாளர்; எந்த படம் தெரியுமா?
விஜயகாந்த் நடிப்பில் வெளியான கூலிக்காரன் திரைப்படத்தின் பூஜைக்காக போஸ்டர் அடிக்கப்பட்டது என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். மேலும், இதன் திரையிட்டு விழாவிற்காக விஜயகாந்திற்கு சிலை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான கூலிக்காரன் திரைப்படத்தின் பூஜைக்காக போஸ்டர் அடிக்கப்பட்டது என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். மேலும், இதன் திரையிட்டு விழாவிற்காக விஜயகாந்திற்கு சிலை வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் பூஜைக்காக போஸ்டர் அடிக்கப்பட்டது விஜயகாந்திற்கு மட்டுமே நடந்தது என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
Advertisment
தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வருபவர் கலைப்புலி தாணு. திரைப்பட தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன்பாக ஃபைனான்சியராகவும், விநியோகஸ்தராகவும் தனது பயணத்தை கலைப்புலி தாணு தொடங்கினார். கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான யார்? திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக இவர் அறிமுகம் ஆனார்.
தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் விஜயகாந்தை வைத்து பல படங்களை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். குறிப்பாக, கூலிக்காரன், நல்லவன், புது பாடகன் போன்ற படங்கள் வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. பாலு மகேந்திரா இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரித்த வண்ண வண்ண பூக்கள் திரைப்படம், தேசிய விருதை வென்றது.
இது தவிர அஜித்தை வைத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யாவிற்கு காக்க காக்க, விஜய்க்கு சச்சின், துப்பாக்கி, தெறி போன்ற படங்களை இவர் தயாரித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் இவர் தயாரித்த கபாலி திரைப்படம், அப்போதைய சூழலில் பெருமளவு பேசப்பட்டது. இது தவிர 1994-ஆம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் கலைப்புலி தாணு நடித்தார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், கூலிக்காரன் திரைப்படம் தொடர்பாக சில சுவாரஸ்ய தகவல்களை கலைப்புலி தாணு பகிர்ந்து கொண்டார். அதன்படி, "விஜயகாந்த் நடிப்பில் வெளியான கூலிக்காரன் என்ற திரைப்படத்தை, சரித்திரம் கண்ட படம் என்று கூறலாம். ஏனெனில், முதன்முதலாக பூஜைக்கு போஸ்டர் அடிக்கப்பட்ட திரைப்படம் அது தான். இந்தப் பெருமை விஜயகாந்திற்கு இருக்கிறது. அப்படத்தில், விஜயகாந்தின் புகைப்படங்களை ஸ்டில்ஸ் ரவி எடுத்தார்.
கூலிக்காரன் திரைப்படம் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. அப்படத்தின் திரையிட்டு விழாவிற்காக, விஜயகாந்த், கைவண்டி இழுத்துச் செல்வதை போன்று ஒரு சிலை அமைத்தேன். தேவி திரையரங்கில் இந்த சிலை வைக்கப்பட்டிருந்தது. இதற்காக, பொன்னேரிக்கு விஜயகாந்தை அழைத்துச் சென்று சிலை செய்வதற்காக மோல்டு எடுக்கப்பட்டது" என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.