இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில், தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல் தயாரிப்பில் உருவான அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில், ஒரு சூப்ப்ர் ஹிட் பாடல் உருவானபோது நடந்த சம்பவத்தை இங்கே பார்ப்போம்.
அவள் ஒரு தொடர்கதை படத்தில் ஒரு பாட்டு எழுத, கவிஞர் கண்ணதாசன், தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல், இயக்குநர் பாலச்சந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் 3 நாட்கள் அமர்ந்தும் பாட்டு எழுதாத கவிஞர் கண்ணதாசனை தயாரிப்பாளர் ராம அரங்கண்ணலை கொட்டும் மழையில் விரட்ட, கோபத்தில் கவிஞர் கண்ணதாசன் உதிர்த்த வார்த்தைகளில் சூப்பர் ஹிட் பாடல் உருவானது. இந்த நிகழ்வு குறித்து பிரபல பேச்சாளர் நெல்லை ஜெயந்தன் ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில், தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல் தயாரிப்பில் உருவான அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் 1974-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சுஜாதா, ஜெய்கணேஷ், கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, படாஃபட் ஜெயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
அவள் ஒரு தொடர்கதை படத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. முதல் நாள் அவள் ஒரு தொடர்கதை படத்தில் கதை சூழ்நிலையைச் சொல்லி, அதாவது ஒரு அண்ணன் தங்கையைத் திட்டுகிறான். ஆனால், பாடல் நேரடியாக குடும்ப உறவுகளை விளக்குவது போல அமையாமல், ஒரு சித்தர் பாடல் மாதிரி இருக்க வேண்டும். அப்படி ஒரு பாடல் எழுத வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசனிடம் கூறுகிறார்கள்.
இதைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன் சரி என்று சொல்லிவிட்டு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்த்து, “என்ன விசு, மீட்டருக்கு மேட்டரா, இல்ல மேட்டருக்கு மீட்டரா” என்று கேட்கிறார்.
அதாவது டியூனுக்கு ஏற்ர பாடல் வரிகள் எழுத வேண்டுமா, அல்லது பாடல் வரிகளுக்கு டியூன் அமைப்பதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், “டியூனுக்குதான் பாடல் வரிகள் எழுத வேண்டும், டியூன் தயாராக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் சரி என்று டியூனை வாசிக்கச் சொல்லியிருக்கிறார். இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் டியூனை வாசிக்கிறார்.
அந்த டியூனுக்கு பாடல் எழுதுவதற்கு கவிஞர் கண்ணதாசன் யோசிக்கிறார், யோசிக்கிறார், அவரால் பாடல் எழுத முடியவில்லை. முதல் நாள் பாடல் எழுத முடியவில்லை.
இதற்கு அடுத்து, அதே டியூனுக்கு அதே சூழ்நிலைக்கு பாடல் எழுத உட்காருகிறார்கள். இந்த நிகழ்வு அவள் ஒரு தொடர்கதை படத்தின் தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல் அலுவலகத்தில் நடக்கிறது. இரண்டாவது நாளும் கவிஞர் கண்ணதாசனால் பாடல் எழுத முடியவில்லை.
திரும்ப மூன்றாவது நாள் அதே டியூனுக்கு அதே சூழ்நிலைக்கு பாடல் எழுதுவதற்கு கவிஞர் கண்ணதாசன், தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல், இயக்குநர் பாலச்சந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் உட்கார்ந்துவிட்டனர்.
மூன்றாவது நாள் கவிஞர் கண்ணதாசன், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனைப் பார்த்து, “என்னய்யா இது, நீ ஒரு மெலடி டியூனைப் போட்டு வச்சிருக்க, அந்தாளு என்னன்னா சித்தர் பாட்டு மாதிரி வேணுங்கிறார், அண்ணன் தங்கச்சியை திட்டுகிறார் என்கிறார். நீ மெலடி டியூன் போட்டு வச்சிருக்க. டியூனை மாத்துயா” என்று கூறியுள்ளார்.
இதற்கு எம்.எஸ். விஸ்வநாதன், “அதெல்லாம் டியூனை மாத்த முடியாதுண்ணே, அண்ணந்தான தங்கச்சிய திட்டுறான், ரெண்டு பேரும் என்ன பகையாளிகளா, அவன் சுமாராத்தான் திட்டுவான், அதனால், அதனால, இது மெலடிதான், நான் டியூனை மாத்தமாட்டேன்” என்று கூறுகிறார்.
கவிஞர் கண்ணதாசன் சரி என்று பாடல் எழுத யோசிக்கிறார். மூன்றாவது நாளும் கவிஞர் கண்ணதாசனால் அந்த டியூனுக்கு, அந்த கதை சூழ்நிலைக்கு பாடல் எழுத முடியவில்லை.
கவிஞர் பாடல் எழுதுவதாகத் தெரியவில்லை என்று இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், சரி நான் வீட்டுக்கு போகிறேன் என்று கம்பெனி காரில் கிளம்பி போகிறார். கார் அவரை இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் வந்து கவிஞர் கண்ணதாசனை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும். அதற்குள், வெளியே சோவென மழை பெய்கிறது.
அங்கே வெளியே மழை பெய்வதால், கவிஞர் கண்ணதாசன், தயாரிப்பாளர் ராம அரங்கண்ணலைப் பார்த்து, தனக்குப் பிடித்தமான சில விஷயங்களை வாங்கி வரச் சொல்கிறார்.
இதைக் கேட்ட தயாரிப்பாளர் ராம அரங்கண்ணலுக்கு கோபம் வந்துவிட்டது. கவிஞர் கண்ணதாசனைப் பார்த்து, “மூனு நாளா உக்காந்து பாட்டு எழுத முடியல, உனக்கு அதுக்குள்ள இதெல்லாம் கேக்குதா, முடியாதுயா, அதெல்லாம் வாங்கிவர முடியாதுயா, மழைக்கு ஒதுங்குவதற்கு என் ஆஃபீஸாவது இருக்குனு நினைச்சுக்க நீ” என்று சொல்கிறார்.
தயாரிப்பாளர் ராம அரங்கண்ணல் இப்படி சொன்னதும் கவிஞர் கண்ணதாசனுக்கு கோபம் பொத்துகொண்டு வந்துவிட்டது.
கவிஞர் கண்ணதாசன் கோபத்துடன் அப்படியே நாற்காலியில் இருந்து எழுந்து, “உன் ஆஃபிஸைத் தவிர மழைக்கு எனக்கு ஒதுங்க இடம் கிடையாதா, உன் ஆஃபிஸ் இல்லைனா என்னய்யா, தெய்வம் தந்த வீடு தெரு இருக்குயா” என்று சொல்லிக்கொண்டே, “யோவ் அந்த டியூன் என்னய்யா, அந்த டியூனுக்கு பாட்டு இதான்யா, ‘தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ இதான்யா பல்லவி. வரச் சொல்லுயா எம்.எஸ்.வி-ய” என்று கூறியிருக்கிறார்.
அப்போது எல்லாம் செல்போன் கிடையாது. தொலைபேசிதான். எம்.எஸ்.வி. வீட்டுக்கு போன் பண்ணி அவர் வந்தால் மீண்டும் வரச் சொல்லுங்கள் என்று கூறுகிறார்கள். வீட்டுக்கு போன இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் வீட்டில் உங்களை மீண்டும் ஆஃபீஸுக்கு வரச்சொன்னார்கள் என்று கூறுகிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் உடனே புறப்பட்டு செல்கிறார். எம்.எஸ்.வி ராம அரங்கண்ணல் அலுவலகத்துக்கு வருகிறார்.
கவிஞர் கண்ணதாசன் அந்த டியூனுக்கு பாடல் வரிகளை அருவியாகக் கொட்டித் தீர்க்கிறார். பிரமாதமான பாடல் உருவாகிவிட்டது.
இந்த நிகழ்வு குறித்து படத்தின் இயக்குநர் பாலச்சந்தர் கூறுகிறார். அன்று இரவு முழுவதும் நான் விழித்திருந்தேன். கண்ணதாசன் எழுதிய வரிகளில் ஒரு நான்கு சரணங்களைத் தேர்வு செய்வதற்கு. எந்த வரிகளை தேர்வு செய்வது எந்த வரிகளை விடுவது என்று தெரியாமல் அத்தனையும் அற்புதமான வரிகள் என்று கூறுகிறார். அப்படி உருவானதுதான் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்று பாடல்.
3 நாட்கள் அமர்ந்தும் பாட்டு எழுதாத கவிஞர் கண்ணதாசனை தயாரிப்பாளர் ராம அரங்கண்ணலை கொட்டும் மழையில் விரட்ட, கவிஞர் கண்ணதாசன் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளில் உருவான சூப்பர் ஹிட் பாடல், இந்த நிகழ்வு குறித்து பிரபல பேச்சாளர் நெல்லை ஜெயந்தன் ஒரு மேடையில் பேசியிருக்கிறார்.
இதற்கு கவிஞர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன், பேச்சாளர் நெல்லை ஜெயந்தன் மீது வழக்கு தொடர்வேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு நெல்லை ஜெயந்தன் இதை அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் கதாசிரியர் எம்.எஸ். பெருமான், சிகரங்களுடன் நான் என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் என்று கூறிய பிறகுதான் வழக்கு தொடராமல் விடுத்தார். இந்த எம்.எஸ். பெருமான் யார் என்றால், பிரபல ஆன்மீக பேச்சாளர் சுகி சிவத்தின் சகோதரர் ஆவர். இவர், தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குநராக இருந்தவர்.
தயாரிப்பாளர் ராம. அரங்கண்ணல், எழுத்தாளார், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். தி.மு.க சார்பாக 3 முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.