பைரசிக்கு உறுதுணையாக இருந்த 10 தியேட்டர்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இந்த தியேட்டர்களில் இனி புதுப்படங்கள் ரீலீஸ் ஆகாது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பைரசிக்கு உதவியதாக இந்த தியேட்டர்கள் மீது அதிரடியான நடவடிக்கை பாய்ந்துள்ளது.
தமிழ்த் திரைப்படங்கள், ரிலீஸான அன்றே ஆன்லைனில் கிடைப்பது வாடிக்கையாகிவிட்டது. எவ்வளவோ போராடியும், தமிழ் திரையுலகத்தால் இதனை தடுக்க முடியவில்லை. புதிதாக ரிலீசாகும் படத்தை மறுநாளே திருட்டுத் தனமாக வெளியிட்டு படம் எடுத்தவர்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒரு கூட்டம்.
இருப்பினும், விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிந்தளவு இந்த பைரசியைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனி டீமை விஷால் நியமித்திருந்தார். அதில், சில தியேட்டர்களில் இருந்து திருட்டுத்தனமாகப் படம்பிடிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
அப்படி ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 10 தியேட்டர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. அந்தத் தியேட்டர்களின் என்னென்ன படங்கள் திருட்டுத்தனமாகப் படம்பிடிக்கப்பட்டன என்ற தகவலும் அதில் உள்ளது.
இந்நிலையில், அந்த குறிப்பிட்ட தியேட்டர்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்து, க்யூப் நிறுவனத்துக்கும் இதைத் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற வாரம் ரிலீஸாகும் படங்களின் தயாரிப்பாளர்களும், தங்கள் படங்களை மேற்கண்ட தியேட்டர்களில் திரையிடக்கூடாது என க்யூப் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். இதையே அடுத்தடுத்து ரிலீஸாகும் படங்களின் தயாரிப்பாளர்களும் செய்ய வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.