Ilayaraaja's Psycho 1st Single : இயக்குநர் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்துக்குப் பிறகு, இயக்குநர் மிஷ்கினின் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார் நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின்.
Advertisment
சைக்கோ த்ரில்லர் படமான இதில், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் என இரு நடிகைகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநர் ராம், சிங்கம்புலி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பில், அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரிக்கிறார். மிஷ்கினின் ‘நந்தலாலா’, ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகியப் படங்களுக்குப் பிறகு ‘சைக்கோ’ படத்துக்கு இசையமைக்கிறார் இசைஞானி இளையராஜா.
மிஷ்கினுடன் முதன் முறையாக கைகோர்த்திருக்கும் உதயநிதி, இந்தப் படத்தில் பார்வையற்றவராக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் முதல் சிங்கிள் ட்ராக்கான ‘உன்ன நெனச்சு’ என்ற பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இளையராஜாவின் இசையில் அவர் பாடியுள்ள முதல் பாடலும் இதுதான். பாடலாசிரியர் கபிலன் எழுதியிருக்கும் இந்தப் பாடலை நேற்று தனது ட்விட்டரில் வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்.
Advertisment
Advertisements
கிடார் ஒலியை அதிகளவு பயன்படுத்தி கம்போஸ் செய்யப்பட்டிருக்கும் இந்தப் பாடல், கேட்பவரின் மனதை உருக வைக்கிறது. அதோடு, மெலடி என்றாலே இளையராஜாவுக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது. எத்தனை டெக்னாலஜிகள் வந்தாலும், தனது தனித்துவத்திலிருந்து அவர் மாறாததன் விளைவாகத் தான் அவரின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘உன்ன நெனச்சு’ பாடல் அனைவரின் ஃபேவரிட்டாக இடம்பிடித்துள்ளது. பாடலைக் கேட்கும் போது ’அட நம்ம ராஜாவுக்கு 76 வயசா?’ என எண்ணத் தோன்றுகிறது.
தவிர, இந்தப் பாடல் பதிவின் போது, பாடி முடித்த சித் ஸ்ரீராம் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினாராம். அப்போது அவரை தூக்கிய ராஜா, ‘நீ ஏற்கனவே ஆசிர்வதிக்கப்பட்டவன் தான், எழுந்திரு’ என்றாராம். இதைக் கேட்ட சித் ஸ்ரீராமுக்கு தலை கால் புரியவில்லையாம். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார், ’உன்ன நெனச்சு’ பாடலின் பாடகரான சித்!