சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் மற்றும் சினேகா இணைந்து நடிக்க இருக்கும் படம் புதுப்பேட்டை 2 தானா என்ற ஆர்வத்தை கிளறியிருக்கிறது.
2006ம் ஆண்டு தனுஷ், சோனியா அகர்வால், சினேகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்தப் படம் தான் புதுப்பேட்டை. அந்த படத்தில் சினேகா மற்றும் தனுஷின் கூட்டணி ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பிடித்துள்ளது. அதன் பிறகு எத்தனை படங்களில் தனுஷ் நடித்திருந்தாலும், கொக்கி குமார் தான் அவரின் ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரம்.
புதுப்பேட்டை 2 வருகிறதா?
தற்போது அதே கொக்கி குமார் கதாபாத்திரம் தான் மீண்டும் உருவாகிறதா என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. தியாகராஜனின் - சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.
தற்போது 13 ஆண்டுகள் கழித்து தனுஷுடன் இரண்டாவது முறையாக இப்படத்தில் நடிக்கிறார் சினேகா. எனவே நேற்று முதல் சினேகா மற்றும் தனுஷின் ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியவில்லை.
எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.
அனேகன் , மாரி , மாரி 2 படங்களுக்கு பிறகு 4 வது முறையாக தனுஷுடன் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். வடகறி , டோரா , குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த ஒரசாத பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை உரசிச் சென்ற விவேக் மெர்வின் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். இன்று குற்றாலத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.