நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் டிசம்பர் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் வெளியானது.
இந்தப் படத்தின் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது.
அந்த வகையில் சிறப்பு காட்சியை காண பலர் குவிந்தனர். அப்படி ஐதராபாத்தில் படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். வலி மிகுந்த இந்த நேரத்தில், உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு துணை நிற்பதாக அல்லு அர்ஜுன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “சந்தியா திரையரங்கில் நடந்த சோகமான சம்பவத்தால் ஆழ்ந்த மனவேதனை. நினைத்துப் பார்க்க முடியாத இக்கட்டான நேரத்தில் துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வேதனையில் அவர்கள் தனியாக இல்லை என்றும், குடும்பத்தை நேரில் சந்திப்பார்கள் என்றும் அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். துக்கப்படுவதற்கான அவர்களின் தேவையை மதிக்கும் அதே வேளையில், இந்த சவாலான பயணத்தில் அவர்கள் செல்ல உதவுவதற்கு சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“