இணையத்தில் என்னை ட்ரோல் செய்ய நடிகர் விஜய் தேவரகொண்டா பணம் தருவதாக நடிகை அனசுயா பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
குறுகிய காலத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக நடித்த லைகர் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார்.
இதனிடையே இணையத்தில் என்னை ட்ரோல் செய்யவும் என்னை பற்றி அவதூறு பரப்பவும் விஜய் தேவரகொண்டா பணம் கொடுப்பதாக நடிகை அனசுயா பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். 2003-ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான நாகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான அனசுயா பரத்வாஜ், 13 வருட இடைவெளிக்கு பிறகு சொக்கடே சின்னி நயனா என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி ஆனார்.
அதனைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனசுயா பரத்வாஜ் புஷ்பா படத்தில் நடிகர் சுனிலின் மனைவியாக நடித்து மிரட்டியிருந்தார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் இவர் தமிழில் ப்ளாஷ்பேக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.
விஜய் தேவரகொண்ட படங்கள் வெளியாகும்போது அதற்கு எதிர்மறையான கருத்துக்களை கூறி வரும் அனசுயா, அர்ஜூன் ரெட்டி, லைகர் படங்கள் வெளியாகும்போது அதனை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்களும் இவரை இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்தின் போஸ்டர் குறித்து அனசுயா கூறிய கருத்து சர்ச்சையாக வெடித்தது.
இதனிடையே விஜய் தேவரகொண்டா உடனான மோதல் குறித்து பேசியுள்ள அனசுயா, நாங்கள் நண்பர்களாகத்தான் இருந்தோம். ‘அர்ஜுன் ரெட்டி’ வெளியான போது, படத்தில் சில மோசமான வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டன. ஆனால் திரையரங்குகளுக்குச் செல்லும்போது ரசிகர்கள் அந்த வார்த்தைகளைக் கூறினர். ஒரு தாயாக அது இந்த வார்த்தைகள் என்னை காயப்படுத்தியது. இதனால் அது போன்ற வார்த்தைகளைப் பேச ரசிகர்களை ஊக்குவிக்காதீர்கள் என்று விஜய் தேவரகொண்டாவிடமே சொன்னேன். இதனால் அவரது ரசிகர்கள் என்னை ட்ரோல் செய்தார்கள். பின்பு நான் அதை மறந்துவிட்டேன்.
அடுத்து எனக்கு எதிராக அவதூறு பரப்ப, அவர் தரப்பில் இருந்து பணம் கொடுக்கப்பட்டது என்ற தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது விஜய் தேவரகொண்டாவுக்குத் தெரியாமல் நடந்திருக்காது. அவருக்கு என் மீது வெறுப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாது. எனக்கு மன அமைதி தேவை என்பதால் இதில் இருந்து விடுபட்டு, அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“