பாலிவுட்டில் இயக்குநர்கள் ஒன்றிணைந்து ஆந்தாலஜி வகை படம் மற்றும் இணைய தொடர்களை இயக்குவது வாடிக்கையான ஒன்று. தற்போது அது தமிழ் சினிமாவிலும் நிகழ்ந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
‘அவரும் நானும்/ அவளும் நானும்’ என்ற கதையை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் ரிது வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் ‘மிராக்கிள்’ என்ற கதையை இயக்கியுள்ளார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜீவ் மேனன் இயக்கியிருக்கும் ‘ரீயூனியன்’ கதையில் ஆன்ட்ரியா, லீலா சாம்சன், குருச்சரண் ஆகியோர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்னம் இயக்கி நடித்திருக்கும் ‘காஃபி எனி ஒன்’ கதையில் அவருடன் இணைந்து சகோதரிகள், ஸ்ருதிஹாசன், அனுஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
அமேசான் ப்ரைமில் வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலரை, இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கை அறிவிக்க, அதனால் யார் யார் என்னென்ன சுக துக்கங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”