Jyothika's Raatchasi Review: திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த இவர், ’மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘காற்றின் மொழி’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, கெளதம் ராஜ் இயக்கியுள்ளார். பெரும் பொறுப்பில் கை நிறைய சம்பளத்துடன் எத்தனை வேலைகள் இருந்தாலும், அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற ஆவலுடன் பணியாற்றத் தொடங்குகிறார் ஜோ.
ஆனால், அந்தப் பள்ளிக்கூடத்திலோ எதுவுமே சரிவர கடைப்பிடிக்கப்படாமல், மாணவர்களை அலட்சியமாக வழி நடத்த அனுமதிக்கிறது. எல்லா விஷயங்களுக்கும் முட்டுக் கட்டை போடும் நபர் அங்கும் இருக்கிறார். எதிர்ப்புகளைத் தாண்டி, இதை சரி செய்து பள்ளியை எப்படி ஜோதிகா சீர்திருத்துகிறார் என்பதே மீதி கதை.
இதற்கு முன் ‘காக்க காக்க’ படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருப்பார் ஜோதிகா. மாயா என்ற அந்த கதாபாத்திரம் ஜோதிகாவின் திரை வாழ்க்கையில் முக்கியமானது. ’ராட்சசி’யில் வரும் கீதா ராணியும் அப்படித்தான். குறிப்பாக அவர் திருமணத்துக்குப் பிறகு நடித்தப் படங்களில் இது தான் டாப் எனும் அளவுக்கு பெர்ஃபார்மென்ஸில் மிரட்டியிருக்கிறார்.
‘கணக்கு பாடத்தில் ஒரு பையன் 100 மார்க் எடுத்து, சயின்ஸில் தோல்வி பெற்றால், அவன் மக்கு பையனா, கல்வி சிஸ்டம் சரியில்லையா’ என்ற வசனங்கள் யோசிக்க வைக்கின்றன. தன் தந்தை இழப்பில் கூட அழாமல், பள்ளிக்கு செல்லும் ஜோதிகா பார்வையாளர்களை கவர்கிறார். நிதானம், கோபம், நட்பு, முறைப்பு என ஒரே கதாபாத்திரத்தில் பல அவதாரங்களை எடுத்திருக்கிறார் ஜோ.
வெறும் மாணவர்களுக்கான படமாக இதனை கடந்து செல்லாமல், ஒவ்வொரு பெற்றோரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒளிப்பதிவும், சான் ரோல்டனின் இசையும் ராட்சசிக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.
ஆனால் இதற்கு முன் இதே களத்தை மையமாக வைத்து வெளியான, ’சாட்டை’ படம் நினைவுக்கு வருவதைத் தான் தவிர்க்க முடியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.