Raatchasi Trailer : 5 ரூபாய்க்கு நடிக்க சொன்ன 5 கோடிக்கு நடிக்கும் நடிகை என்ற கலாய்-யான விமர்சனம் நடிகை ஜோதிகா மீது இருந்தாலும் இப்படி ஒரு நடிப்பை பார்த்து, அதைக் கொண்டாடாமல் அவரின் ரசிகர்களால் இருக்கவே முடியாது.
அதே முறைப்பு, திமிரான நடை, தப்பை தட்டி கேட்கும் துணிச்சல் நாச்சியார் ஜோதிகா “ இஸ் அகேன் பேக்” புதுமுக இயக்குனர் கெளதம்ராஜ் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் ராட்சசி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தை தெறிக்க வைத்துள்ளது.
திருமணத்திற்குப் பின் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி என தொடர்ந்து வித்யாசமான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் படம் தான் ராட்சசி. ஜோதிகாவின் தற்போதைய படங்களில் பெண்களுக்காக கருத்துக்கள், அல்லது சமுதாயத்திற்கு அவசியம் சொல்லக்கூடிய கருத்து கட்டாயம் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் ராட்சசி படத்தில் அரசு பள்ளி ஆசிரியராக களம் இறங்கி இருக்கிறார் ஜோ.
காட்டன் சாரி, காலர் வைத்த ஃப்ளவுஸ், நேர்க்கொண்ட நிமிர்ந்த நடை, யாருக்கும் அடிப்பணியாத துணிச்சல் என ட்ரெய்லரில் ஜோதிகாவை பார்க்கும் போது கண்கள் விரிகின்றன. ஹீரோக்களை மையப்படுத்தி வரும் படங்களில் ஹீரோயின்கள் பெர்ஃபார்ம் செய்வதற்கு வாய்ப்பு ரொம்பவே குறைவாக இருக்கும். சில படங்களில் கிளாமருக்கு மட்டுமே நடிகைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாறி, ஹீரோயின்களை மையமாக வைத்துத் தயாராகும் படங்கள் நிறைய வரத் தொடங்கி, அது ஒரு முக்கியமான ஜானராகவும் மாறிவிட்டது. இந்த ஜானரில் நடிகை ஜோதிகா அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமணம், குழந்தைகள் எனப் பிஸியாக இருந்த ஜோதிகாவின் ரீஎன்ட்ரி, சூப்பர் கம்பேக் என்றே சொல்லலாம்.அந்த வகையில் தற்போது நடிகை ஜோதிகாவின் ராட்சசி திரைப்படம் கண்டிப்பாக அவரின் வெற்றி படங்கள் வரிசையில் இடம் பெறும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரெய்லரை பார்த்த பலரும் பாராட்டுவதும் ஜோதிகாவின் நடிப்பை பற்றித்தான்.
ஜோதிகா இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தார். ஆனால் ராட்சசி படத்தில் அப்படியே டோட்டலாக ஆளே மாறி வித்யாசமாக தெரிகிறார். அரசுப் பள்ளியின் கல்வித் தரம் உயர்வதற்குக் குரல் கொடுப்பவராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
எஸ்.ஆர்.பிரபு தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பெரேடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கூடம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமான காட்சிகள் இதில் படமாக்கப்படவுள்ளன.