Rachitha Mahalakshmi latest Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடிப்பதற்கு முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
Advertisment
தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் நடித்து வரும் இவருக்கு வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இவர் இந்த படத்திற்கு முன்பும் கூட சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் ஹீரோயினாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
தமிழ் சீரியல்களில் கலக்கி வந்த ரச்சிதா மகாலட்சுமி தற்போது ஒப்பந்தமாகி இருப்பது தமிழ் படத்தில் இல்லை மாறாக கன்னட படத்தில் தான். இவர் ஹீரோயினாக நடிக்கும் படத்தை இயக்கும் குருபிரசாத் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் முன்னதாக வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
ரச்சிதா மகாலட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள படம் குறித்து பேசியுள்ள குருபிரசாத், "இது ஒரு பக்கா காமெடி படம். ரச்சிதாவுடன் சேர்ந்து நிறைய பேர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரம் தான் பாக்கி இருக்கிறது. படப்பிடிப்பை முடித்த உடன் படத்தின் பெயர், நடிகர்கள், நடிகைகளின் விபரங்களை வெளியிடுவேன்" என்று கூறியுள்ளார்.