நயன்தாரா… உதயநிதி..! ராதாரவி மீண்டும் சர்ச்சை பேச்சு வீடியோ

நடிகர் ராதாரவி, மீண்டும் நடிகை நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பற்றி சர்ச்சையாக பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராதாரவி, மீண்டும் நடிகை நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பற்றி சர்ச்சையாக பேசியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நயன்தாரா… உதயநிதி..! ராதாரவி மீண்டும் சர்ச்சை பேச்சு வீடியோ

அதிரடியான சர்ச்சை பேச்சுகளுக்கு சொந்தக்காரரான நடிகர் ராதாரவி, மீண்டும் நடிகை நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர் நடிகர் ராதாரவி. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திமுகவில் இருந்தபோது ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை குறிப்பிடும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், ராதாரவி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

ராதாரவின் சர்ச்சை பேச்சு குறித்து அப்போது அறிக்கை வெளியிட்ட நயன்தாரா, “''நான் பொதுவாக அரிதாகவே அறிக்கை விடுவேன். நான் எப்போதும் என்னுடைய தொழில்முறை ரீதியிலான வேலை மூலமாக பேசுவது வழக்கம். ஆனால் இன்று என்னுடைய நிலைப்பாட்டை விரிவாக விளக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறேன்.

முதலில் ராதாரவியின் பெண் வெறுப்பு பேச்சுக்கு எதிராக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment
Advertisements

ராதாரவி மற்றும் அவரை போன்ற பெண் வெறுப்பாளர்களும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பெண்களை தாழ்த்தி பேசுவதன் வழியாகவும், அவர்களை ஆபாச பொருளாக விவரிப்பதன் மூலமாகவும் இம்மாதிரியானவர்கள் ''ஆண் பெருமை'' உணர்வை பெறுகின்றனர்.

இதுபோன்ற 'ஆணாதிக்க பெருமை' கொண்டவர்களின் குடும்பங்களில் வாழும் பெண்களுக்கு எனது பச்சாதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு மூத்த நடிகராக ராதாரவி இளம் தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் ஆண் பெருமை பேசுபவர்களுக்கு உதாரணமாக உள்ளார். ராதாரவி மாதிரியான ஆட்கள் தொழிலில் வீழ்ச்சியை சந்தித்த பிறகு இது போன்ற மலிவான உத்திகளை கையாண்டு வெளிச்சம் பெற முயல்கிறார்கள்.

உண்மையில் இன்னமும் அதிர்ச்சியாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ராதாரவியின் ஆணாதிக்க பேச்சுக்கு அங்கிருந்த கூட்டத்தில் சிலர் சிரித்து கைதட்டியிருக்கின்றனர்.

ரசிகர்கள் இதுபோன்று பெண்ணை போகப்பொருளாக சித்தரிக்கும் பேச்சுகளுக்கு ஆதரவு கொடுக்கும் வரை ராதாரவி மாதிரியானவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமான கேலி பேச்சுகளை மேடையில் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.

ராதாரவியின் இது போன்ற நடத்தைகளை எனது அன்புக்குரிய ரசிகர்களும் நல்ல எண்ணம் கொண்ட பொதுமக்களும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ராதாரவியின் பெண்களுக்கு எதிரான பேச்சுக்கும், குறிப்பாக என்னை குறித்து பொதுவில் பேசிய விஷயத்திற்கும் இந்த அறிக்கையின் வாயிலாக வலுவான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கடவுளின் அருளால் எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களும், பாசமான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். இது போன்ற எதிர்மறை விஷயங்களுக்கு இடையில் நான் தொடர்ந்து சீதா, பேய், கடவுள், தோழி, காதலி, மனைவி என எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிப்பேன்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடைசியாக என்னுடைய ஒரு பணிவான கேள்வியை கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி விசாகா வழிகாட்டுதலோடு உள் விசாரணை கமிட்டியை அமைப்பீர்களா?'” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் ராதாரவி தான் திமுகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாகக் கூறி வெளியேறினார். தொடர்ந்து, அவர் பாஜகவில் இணைந்தார். தற்போது, அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியினர், சர்ச்சைக்குரிய வகையில் பேசிவருவது பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையும் பெற்றுள்ளதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ராதாரவி பிரசாரம் கூட்டம் ஒன்றில், நடிகை நயன்தாராவையும் திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதியையும் அவதூறு செய்யும் விதமாக பேசியுள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த நடிகர் ராதாரவி அந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: “ஒன்னுமில்ல, நயன்தாரானு ஒரு நடிகை இருக்கு இல்ல, நான் அதைப் பற்றி பேசவே இல்லை. ஆனால், பத்திரிகையில் போட்டு பெருசாக்கி மாற்றிவிட்டுவிட்டார்கள்… நான்தான் பேசுனேன்… நான்தான் பேசுனேன்… சரி பேசினேன் வெச்சுக்கடா போடானு சொல்லிட்டேன்… உடனே, துடிக்கிறானுங்க திமுக-ல, பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் ராதாரவி, அதனால், அவரை கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்குறோம். நான் சொன்னேன். ஏண்டா தற்காலிகமாக, நான் பெர்மனண்ட்டாக வெளியே வந்துடறேன் என்று சொல்லிவிட்டு நான்தான் வந்தேன். சன் டிவியிலும் இந்த நியூஸ் வந்தது. ஏனென்றால், நான்தான் பேட்டி கொடுத்தேன். எதுக்கு நான் சொல்றேனா, நயன்தாரா யார்ரா உங்க கட்சி கொள்கை பரப்பு செயலாளரா சொல்லு… என்ன ஒறவு உனக்கு? சரி உதயநிதிக்கு அதுக்கும் ஒறவுனா நான் என்ன செய்றது?” சர்ச்சையாக பேசியுள்ளார்.

நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாராவையும் நடிகர் உதயநிதியையும் தொடர்புபடுத்தி பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Radharavi Udhayanidhi Stalin Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: