பாலிவுட்டில் நிகழும் பாலியல் குற்றங்கள் பற்றி மனம் திறக்கிறார் ராதிகா ஆப்டே மற்றும் உஷா ஜாதவ்

பாலிவுட்டில் நிகழும் பாலியல் தொல்லை குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்தில் மனம் திறந்துள்ளனர் பிரபல நடிகைகள் ராதிகா ஆப்டே, உஷா ஜாதவ் மற்றும் பலர்.

சமீபத்தில் தெலுங்கு திரையுலகில் உள்ள ஜாம்பவான்கள் நடிகைகளை பாலியல் உறவுக்கு அழைப்பதாக ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து பல்வேறு எதிர்ப்புகளும் ஆதரவும் அளிக்கப்பட்டது.
ஸ்ரீரெட்டி முன்வைக்கும் இத்தகைய குற்றச்சாட்டை, சில நடிகைகள் பொய் என்று எதிர்ப்பு தெரிவித்தாலும், பலர் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதில் சற்றும் எதிர்பாராத கருத்தை தெரிவித்தார் பிரபல பாலிவுட் டான்சர் சரோஜ் கான்.

“சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் படுக்கையை பகிர்ந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. பாலியல் பலாத்காரம் போல் அந்த பெண்ணை அப்படியே யாரும் விடவில்லை அதான் வேலைக் கிடைக்கிறதே.” என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

இவ்வாறு படிப்படியாக இந்திய திரையுலகத்தை பற்றி கசப்பான உண்மைகள் வெளிவரும் நிலையில், பிபிசி தொலைக்காட்சி இது பற்றி ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக அக்கரையில் ஈடுபட்டுள்ள விவகாரங்கள் பலவற்றை டாகுமெண்டரி படமாக்குவது பிபிசி சேனலின் ஒரு அங்கம். அதன்படி, தற்போது இந்தியாவில் பேசப்பட்டு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று திரையுலகில் நிலவி வரும் பாலியல் துன்புறுத்தல்கள். இந்த விவகாரத்தை, “பாலிவுட்ஸ் டார்க் சீக்ரெட்” என்ற பெயரில் ஆவணப்படமாகத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தை தயாரிக்கும் குழு பாலிவுட்டில் இருக்கும் பலரை சந்தித்து, இது குறித்து பேட்டிகளையும் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். அவ்வாறு பிரபல நடிகைகள் ராதிகா ஆப்டே மற்றும் உஷா ஜாதவ்விடமும் பேட்டி எடுத்துள்ளனர்.

இந்தப் பேட்டியில், பாலிவுட்டில் நிகழும் பல கசப்பான சம்பவங்கள் மற்றும் நடிகைகளுக்குப் பெரிய இடத்தில் இருந்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. ஆவணப்படம் பேட்டி படப்பிடிப்பில், ராதிகா,

“சிலர் தன்னை பாலிவுட்டின் கடவுள் என்று பாவித்துக் கொள்வார்கள். அவர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள் என்பதால் பல நடிகைகள் எதிராக நடந்துகொள்ள தயங்குவார்கள். இவர்களிடம் நம் பேச்சு எடுபடாது என்றும், அதையும் மீறி குரல் எழுப்பினால் வேலையை இழந்து விடுவோம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இதை எதிர்த்து பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் இந்தச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.”

என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் நடிகை உஷா ஜாதவ் தனக்கு நிகழ்ந்த துயர சம்பவத்தை விவரித்தார். அப்போது பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இவரை பாலியல் உறவுக்கு அழைத்ததாகக் குறிப்பிட்டார். தவறினால் வாய்ப்பை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்.

பிபிசியின் இந்த ஆவணப்படம், நடிகை ஒருவரின் வாக்குமூலமும் அடங்கியுள்ளது. வாய்ப்பு வேண்டுமெனில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார். அதில்,

“என்னை பாலியல் வன்புணர்வு செய்யும்போது, மகிழ்ச்சியாக உடலுறவு வைத்துக்கொள் என்று கூறினார். மற்றும் எனது எதிர்ப்பையும் மீறி என்னை அவர் விருப்பத்திற்கு ஏற்ப கட்டிப்பிடித்தார், முத்தமிட்டார். இதனால் நான் அந்த இடத்திலேயே அதிர்ச்சியில் உரைந்தேன்.”

என்று மனம் திறந்துள்ளார்.

இது போன்ற சம்பவங்களில் பாலிவுட் உலகமே மௌனம் காத்து வரும் வேளையில், ரிச்சா சத்தா, ஸ்வரா பாஸ்கர், ராதிகா ஆப்டே, உஷா ஜாதவ் உட்பட மற்றும் சிலரும் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத நடிகைகளும் இந்த ஆவணப்படத்திற்குப் பேட்டி அளித்துள்ளனர். 20 நிமிடங்கள் நீளும் இந்த ஆவணப்படம் 28ம் வெளிவர உள்ளது.

இதில் முக்கிய குறிப்பாக பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் பேசியதும் இடம்பெற்றுள்ளது. சரோஜ் கானின் இந்தப் பேச்சை தொடர்ந்து ஸ்ரீரெட்டி மற்றும் பலர் அவரை எதிர்த்து கருத்துகள் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சரோஜ் கான் மன்னிப்பு கேட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close