6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம்! - யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்

இன்று எத்தனையோ டிவி சேனல்கள் இருக்கின்றன. பொழுதை போக்க எத்தனையோ டிவி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாக அவர்கள் மனதில் இடம் பிடிக்க, ஒவ்வொரு டிவி சேனலும் போட்டிப் போட்டுக் கொண்டு வித விதமாக சீரியல்களை தயாரித்து வருகின்றன.

ஆனால், பெண்கள் மட்டுமல்ல, அன்று ஆண்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்தவர் ராதிகா சரத்குமார். இன்றைய டிவி சீரியல்களுக்கேல்லாம் ‘பிதாமகள்’ இந்த ராதிகா என்றால் எள்ளளவும் மிகையாகாது.

சினிமாவில் இருந்து தொலைக்காட்சியில் தடம் பதித்த ராதிகா, தனது பிரைம் டைமை எவ்வாறு ஆட்சி செய்தார் என்று இன்றைய 90’ஸ் கிட்ஸ்களுக்கு நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை.

சினிமாவின் அயர்ன் லேடி ராதிகா பற்றிய ஒரு சிறிய ரவுண்ட் அப் இதோ,

பெண்

சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் முதன் முதலாக 1991ல் ‘பெண்’ எனும் டிவி சீரியலில் நடித்தார் ராதிகா. அதன் பிறகு, அவர் சில சீரியலில் நடித்தாலும், 1999 முதல் 2001 வரை சன் டிவியில் வெளியான ‘சித்தி’ தொடர், சினிமாவில் அவர் சம்பாதித்த புகழை விட அதிக புகழை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்தது.

திங்கள் – வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரை காண, ஒவ்வொரு குடும்பமும் டிவியின் முன்பு ஆஜராகிவிடுவார்கள். அப்போதெல்லாம், எல்லோர் வீட்டிலும் டிவி இருக்காது. ஆகையால், டிவி இருப்பவர்கள் வீட்டில், திண்ணை வரை ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெண் தன் வாழ்க்கையில் எவ்வளவு சவால்களை எதிர் கொள்கிறாள் என்பதே இந்த சீரியலில் கதைக் கரு. அதனை டிவியில் அவ்வளவு எதார்த்தமாக எதிரொலித்த ராதிகாவுக்கு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் ரசிகர்களாக இருந்தனர்.

பிறகு, அண்ணாமலை, செல்வி, அரசி என்று அரசாங்கம் செய்தவர் இன்று ‘கோடீஸ்வரி’ எனும் கேம் ஷோவை நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை 6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, இரவு 9.30 மணி ப்ரைம் டைம், 21 ஆண்டுகள் என யாருமே பக்கத்தில் கூட நெருங்க முடியாத சாதனைகளை தொலைக்காட்சி பெட்டிக்குள் புதைத்து வைத்திருக்கிறார்.

அதுவும், தொடர்ந்து 21 வருஷம், ‘இரவு 9.30 மணி ப்ரைம் டைம்’ ராதிகா எனும் ஒற்றை பெண்மணியிடம் மட்டுமே இருந்தது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மெகா சாதனை!.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close