எப்போதுமே தன்னுடைய அக்கா ராதிகாவை உயர்த்தி பேசுவார் நடிகை நிரோஷா. எங்கேயும் ராதிகாவை விட்டுக் கொடுத்ததே இல்லை. அந்த அளவுக்கு ராதிகாவை தனக்கு பிடிக்கும் என்று, ஒவ்வொரு பேட்டிகளிலும் சொல்லி கொண்டே வருகிறார்.
ஜெயா டிவியில் நடிகை சுகாசினி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ராதிகா பங்கேற்றுள்ளார்.. அப்போது, ராதிகாவிடம் நிரோஷா பற்றி கேள்வி எழுப்பினார் சுகாசினி.
"30 வருஷம் முன்னாடி உங்களையும், நிரோஷாவையும் நான் பார்த்தேன்.. அதுபோலவே இப்பவும் இருக்கீங்க.. உங்களை அக்கான்னு கூப்பிடற மாதிரியே என்னையும் அக்கான்னுதான் நிரோஷா கூப்பிடுவாங்க.. அவங்களுடைய திரையுலக வளர்ச்சியை எப்படி பார்க்கறீங்க?" என்று கேட்டார் சுகாசினி.
அத்துடன், "நிரோஷாவையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து, ராதிகாவுக்கு என்ன வாழ்த்து சொல்ல விரும்புறீங்க" என்றும் கேட்டார்.
ராதிகா பேசும்போது, "நிரோஷாவை நான்தான் முதலில் போட்டோ எடுத்தேன். அந்த போட்டோவை நான் பார்த்து கொண்டிருந்தபோது, கமல் சார் இது யாருன்னு கேட்டாரு. என் சிஸ்டர்னு சொன்னேன். பிறகு, மணிரத்னம் கிட்ட, நிரோஷா போட்டோ தந்து, ராதிகா சிஸ்டர்னு சொல்லியிருக்கார். இதுக்கப்புறம்தான், மணிரத்னம் தன்னுடைய படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார்.
ஆனால், அந்த படத்தில் ஒரு பாட்டில், நிரோஷா நீச்சல் டிரஸ் போட்டது, எல்லாருக்குமே சங்கடமாக இருந்தது. ஏனென்றால், அந்த காலகட்டத்தில் நீச்சல் டிரஸ் என்றாலே, கொஞ்சம் கஷ்டப்படுவாங்க.
அப்போது மணிரத்னம் சார் என்கிட்ட வந்து, "நான் இந்த பாட்டை எடுத்து உங்களுக்கு போட்டு காட்டுகிறேன்.. ஒருவேளை உங்களுக்கு இது பிடிக்கலைன்னா, உடனே பாட்டை நான் மாத்திவிடுகிறேன் என்றார்.. ஆனால், அந்த பாடலை மிகச்சரியாகவே அவர் எடுத்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த பாடலாக இன்றுவரை அது உள்ளது" என்றார்.
இதையடுத்து நிரோஷா பேசும்போது, "என் அக்கா, எனக்கு அம்மா மாதிரி. என் அம்மாவைவிட ஒரு படி மேலேன்னு சொல்லுவேன். குடும்பத்தையே தோளில் சுமந்தவர். எங்களுக்கு அக்காதான் ரோல் மாடல்.. எப்பேர்பட்ட கஷ்டமான விஷயமாக இருந்தாலும்சரி, அதிலிருந்து பிரச்சனையை உதிர்த்துவிட்டு, மீண்டு எழுந்துவிடுவார்.
எப்பவுமே இதே மாதிரி என் அக்கா சந்தோஷமா இருக்கணும் என்பதுதான் என்னுடைய ஒரே ஆசை" என்று வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே அக்காவை கட்டி பிடித்து கொண்டே கூறியுள்ளார் நிரோஷா.
இது பழைய பேட்டி என்றாலும், இப்போது மீண்டும் மறுஒளிபரப்பாகி , இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.