Radikaa Sarathkumar: ஹீரோயினாக இருக்கும் போதும் சரி, சப்போர்ட்டிங் நடிகையான பிறகும் சரி, போல்டான கதாபாத்திரங்கள் என்றால், இயக்குநர்கள் அணுகுவது நடிகை ராதிகாவை தான்.
70-களின் இறுதியில் ஹீரோயினாக அறிமுகமாகன இவர், பல்வேறு வித்தியாச பாத்திரங்களில் நடித்து விட்டார். ஒரு புறம் ‘கேளடி கண்மணி’, ‘பவித்ரா’ என படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, மறுபுறம் (1991) சின்னத்திரையிலும் கால் பதித்தார். பொதுவாக உச்சத்தில் இருக்கும் நடிகைகள், தங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் இருக்கும் சமயத்தில் சின்னத்திரைக்கு வர யோசிப்பார்கள். பட வாய்ப்புகள் குறைந்து போகும் பட்சத்தில், தொலைக்காட்சிக்கு விஜயம் செய்வார்கள். அப்படியே வந்தாலும், அதில் நிலைத்து நிற்பது என்பது மிகக் கடினமான ஒன்று. இந்த சவாலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார் ராதிகா.
1991-ல் டிடி சேனலில் ஒளிபரப்பான ‘பெண்’ சீரியல் மூலம் அறிமுகமான ராதிகாவை, தமிழ் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடர். பிறகு, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’, ’வாணி ராணி’, ‘சந்திரக்குமாரி’ என தொடர்ந்து ராதிகாவின் சீரியல்கள் சன் டிவி-யில் ஒளிபரப்பானது. ஆனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் சந்திரக்குமாரி சீரியலில் இருந்து சில காரணங்களால் விலகினார். முந்தைய சீரியல்கள் போல இதற்கு வரவேற்பு இல்லாததே காரணம் என தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய சீரியலுடன் ரசிகர்களை சந்திக்கிறார் ராதிகா. இது சம்பந்தமாக, ’சன் டிவி-யில் நாங்கள் ஆக்ஷனுக்கு திரும்பி விட்டோம். விரைவில் உங்களை சந்திக்கிறோம். ஆசிர்வதியுங்கள்’ என ஒரு ட்வீட்டும், ’இயக்குநர் சமுத்திரக்கனி எனக்கு இன்ஸ்ட்ரக்ஷன்களைக் கொடுக்கிறார். நாங்கள் இருவரும் சின்னத்திரைக்கு திரும்புவதை இது குறிக்கிறது’ என இன்னொரு ட்வீட்டும் போட்டிருந்தார் ராதிகா.
இதனால் ராதிகாவின் புதிய சீரியல் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்!