நடிகர் ராகவா லாரன்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
ராகவா லாரனஸ் ட்விட்டர் பதிவு:
தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டம், மாணவர்களுக்கு கல்வி உதவி, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது கேரள மக்களுக்காவும் களத்தில் இறங்கியுள்ளார்.
கடந்த வாரம் கேரளாவையை புரட்டிப் போட்ட வெள்ளத்தால் அந்த மாநிலமே மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், பல லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது, மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவை இந்த மாபெரும் இழப்பில் இருந்து மீட்க உலக நாடுகள் அனைத்தும் கைக்கோர்த்துள்ளனர். தமிழகத்தில் இருந்தும் நிவாரணப் பொருட்கள், நிவாரண நிதிகள் அனுப்பபட்டு வருகின்றன. மேலும் சினிமா பிரபலங்களான விஜய், விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி போன்றோரும் கேரள மக்களுக்கு லட்சகணக்கில் நன்கொடைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில்,நடிகர் ராகவா லாரன்ஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ “கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரணமாக அளிக்க முடிவு செய்துள்ளேன். வெள்ளப்பெருக்கால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகளும், மக்களின் துயரமும் என்னை மனமுடையே செய்துள்ளன. அவர்கள் நமது சகோதர சகோதரிகளை போன்றவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.