அடுத்த 30 வருஷத்துக்கு கமல்ஹாசன் தான்! சொன்னவர், ரஜினிகாந்த்

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்… ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்…

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துக்கு பிறகு தமிழ் சினிமாவை ஆண்ட இரு துருவங்கள். அதில், ரஜினிகாந்த் இன்னமும் 68 வயதிலும் நம்பர்.1 ஸ்டார்.

ஆனால், 80,90-களில் ரஜினி – கமலின் போட்டி என்பது உச்சத்தில் இருந்தது. போக்கிரி ராஜா, மூன்று முகம், படிக்காதவன், வேலைக்காரன் என்று ரஜினி வசூல் ராஜாவாக வலம் வர, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, விக்ரம், காதல் பரிசு, நாயகன் என பல மாஸ் + கிளாஸ் ஹிட்ஸ்கள் கொடுத்து ரஜினிக்கு ஏ.பி.சி என அனைத்து சென்ட்டரிலும் கடும் போட்டியாக இருந்தார் கமல்ஹாசன்.

இப்போது சமூக ஊடகங்களில் மோதிக்கொள்ளும் அஜித் – விஜய் ரசிகர்கள் எல்லாம், ரஜினி – கமலின் ரசிகர்களின் சுவர் போஸ்டர் அடிதடிகளை நேரில் பார்த்திருந்தால் கப்-சிப் ஆகியிருப்பார்கள். சோஷியல் மீடியாக்கள் மட்டும் அப்போது இருந்திருந்தால் ரணகளம் ஆகியிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில், 1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி கலம்ஹாசனின் பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘புன்னகை மன்னன்’ ரிலீசானது. கே.பாலச்சந்தர் எழுதி, இயக்கியிருந்த இப்படம் காதலர்கள் மத்தியில் பெரும் வைப்ரேஷனை ஏற்படுத்தி இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் லவ் பண்ணி கல்யாணம் செய்திருந்தவர்களிடம் இப்போது கேட்டால் சொல்வார்கள், அந்த வைப்ரேஷன் எப்படி சுனாமியாய் அனைவரையும் தாக்கியது என்று.

அப்படிப்பட்ட புன்னகை மன்னன் படத்தின் 100வது நாள் விழாவிற்கு, சக போட்டியாளர் ரஜினிகாந்தும் அழைக்கப்பட்டிருந்தார். ரஜினியும் வந்திருந்தார். குருநாதர் பாலச்சந்தர் அழைத்தார் என்பதற்காக.. ஆனால், விழாவில் ரஜினி, கமல்ஹாசனைப் பற்றி சொன்ன வார்த்தைகள் அனைத்தும் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ரசிகர்கள் மட்டுமல்ல, நடிகர்களும் கூட.

ரஜினிகாந்த் பேசியது அவரது பாஷையிலேயே, ” ‘புன்னகை மன்னன் 100வது நாள் விழா நடக்கப் போகுது. ரஜினிக்கும், கமலுக்கும் இடையே போட்டி இருக்கு.. பொறாமை இல்லன்னு சொல்றாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் இடையே போட்டியும் இல்ல.. பொறாமையும் இல்லன்னு எல்லாருக்கும் தெரியட்டும்.. அவன வந்து பேசச் சொல்லு’ன்னு பாலச்சந்தர் சார் சொன்னாங்க. அதனால தான் நான் இங்க பேச வந்துருக்கேன்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் கமலஹாசன வச்சு பாலச்சந்தர் சார் படம் பண்ணப் போறார். ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு அப்புறம் பண்ணப் போறார். அதுக்குள்ளே கமலஹாசனோட புகழ், பேர், ஃபாலோயிங், ரசிகர் மன்றங்க எல்லாம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு( பலத்த கைத்தட்டல்). மக்கள் மத்தியில் கமலுக்கு என தனி இமேஜ் உருவாகிடுச்சு. அவர் ஒரு ஃபெண்டாஸ்டிக் ஆக்டர், ஒரு கமர்ஷியல் நடிகர். ஆர்டிஸ்டுக்கும், ஸ்டாருக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. ஸ்டாரு என்பது மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவங்க. ஒரு ஆர்டிஸ்ட் என்பவன் நல்ல நடிகன். ஒரு ஸ்டார் நல்ல நடிகனாக இருக்கணும்னு அவசியம் இல்ல. அதே, ஒரு நடிகன் பெரிய ஸ்டாரா இருக்கணும்னு அவசியம் இல்ல.

கமல்ஹாசன் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல டான்சர் மட்டுமல்ல, நல்ல மனிதர் மட்டுமல்லம் நல்ல ஸ்டன்ட்டு மேனும் கூட. அவரு ஃபைட்டிங் ஆக்டு பண்ணா, டூப்புக்கு வேலையே இருக்காது. அவ்வளவு துணிச்சலா எல்லாம் செய்து நடிகனாகி இருக்கார்.

நமக்கு பொதுவா ஒரு பழக்கம் இருக்கு. ஒரு படம் ரெடியான அப்புறம், பிரிவியூ ஷோவை சில பேரை அழைச்சு போட்டு காட்டுவாங்க.. படம் பார்த்த பிறகு படத்தைப் பத்தி ஒருத்தரும் பேச மாட்டாங்க. ‘அந்த ஹீரோ தங்கச்சியா பண்ண பொண்ணு யாருன்னு’ கேட்பாங்க.. சிலர் ‘உடம்பெல்லாம் நல்லா இருக்கான்னு கேப்பாங்க’. நமக்கு ஏன்டா பிரிவியூ போட்டோம்-னு இருக்கும். அப்படி பல சம்பவங்கள் இந்த புன்னகை மன்னன் படத்துக்கும் நடந்திருக்கு.

அதுக்கப்புறம் சென்சாருல இந்த படத்தை கடிச்சிக் குதறிட்டாங்க. ஆனா, அத எல்லாத்தையும் மீறி, தீபாவளிக்கு வந்த 12-14 படங்கள்ல இந்த படம் கொடிக்கட்டி பறந்ததுல புன்னகை மன்னன், வசூல் மன்னனா மாறினான். புன்னகை மன்னன் படத்தில் வரும் ‘சார்லி செல்லப்பா’ கேரக்டரை, இந்தியாவில் உள்ள எந்த நடிகனாலும் கூட யூகிக்க முடியாது. ஆக்ட் பண்றத விட்டுடுங்க… யூகிக்க கூட முடியாது.

கமல்ஹாசன் ‘நடிகனுக்கு நடிகன்’ .

அந்த பீரியட்ல நடிகனுக்கு நடிகன் என்றால் ‘சிவாஜி கணேசன்’…. இன்று நடிகனுக்கு நடிகன் ‘கமல்ஹாசன்’.

அப்போ நடிப்பு கத்துக்கணும்-னா சிவாஜியை பார்க்கச் சொல்வாங்க. இப்போ, இன்னொரு முப்பது வருஷத்துக்கு நடிக்கணும்-னா கமல்ஹாசனைப் பார்” என்று ரஜினி உரக்கச் சொல்ல, அரங்கமே அதிர்ந்தது.

‘புன்னகை மன்னன்’ ரிலீசான அதே நாள் தான் ரஜினியின் ‘மாவீரன்’ படமும் ரிலீசானது. அப்படிப்பட்ட சக போட்டியாளனை இவ்வளவு இறங்கி வந்து புகழ்ந்து பேச அவசியமில்லை. அதனால் தான் ரஜினி இன்னும் சூப்பர் ஸ்டார்!. அதனால் தான் இன்னமும் ரஜினி – கமலின் நட்பு உயர்ந்து நிற்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close