ரஜினி நடித்து வெளிவரவிருக்கும் 2.0 படத்தின் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு வெளியில் விற்பனை செய்யும் மன்றத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்திய அளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட மாதங்களாக நடைபெற்ற கிராபிக்ஸ் பணிகள் ஒருவழியாக முடிவடைந்து, நவம்பர் 29-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள்.
இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என்று ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நம் அன்புத்தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளிவரவுள்ள 2.0 திரைப்படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்க்கானும் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சி என்று பெறப்பட்ட டிக்கெட்டுகளை வெளியே விற்பனை செய்யக் கூடாது. ரசிகர்களிடம் இருந்து திரையரங்குகளில் இருக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது. இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.