International Film Festival of India 2019 : இந்தியா நடத்தும் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்குகிறது. இதனை இந்திய நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், அமிதாப் பச்சனும் தொடங்கி வைக்கிறார்கள்.
இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்கள் பதிவு செய்துள்ளனர். 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் இந்த திருவிழாவில் திரையிடப்படுகின்றன. இதன் தொடக்க விழாவை திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார். இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியும் இதில் நடைபெறுகிறது.
இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக நடிகர் ரஜினிக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படுகிறது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப்பை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. பச்சனின் மற்ற முக்கிய திரைப்படங்களுடன், அவரது 'ஷோலே' படமும் இவ்விழாவில் திரையிடப்படுகிறது.
இதேபோல பொன்விழா ஆண்டையொட்டி சிறந்த 12 திரைப்படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய ‘இரு கோடுகள்’ படமும் திரையிடப்படுகிறது.
புதன் கிழமை மாலை, நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி“ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து இந்த விருதை ரஜினிக்கு வழங்கினர். விருதைப் பெற்றுக் கொண்ட ரஜினி, “என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தார். அதோடு தன் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும்” குறிப்பிட்டார்.
தவிர, இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன. இப்பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன. அதோடு, இவ்விழாவில் மிகவும் சிறப்பு மிக்க விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது பிரெஞ்சு நடிகை இஸபெல்லா ஹப்பெர்ட்டுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.