ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4 ஆவது பாடலாக ‘வா சாமி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் படம் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்ணாத்த படம், அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் பாடல்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முதல் பாடலாக ரஜினியின் ஒபனிங் சாங்கான ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியிடப்பட்டது. பின்னர் டூயட் பாடலான ‘சாரல் காற்றே’ வெளியிடப்பட்டது. பின்னர் மூன்றாவதாக ’மருதாணி’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல்களும், படத்தின் டீசரும் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘வா சாமி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இந்தப் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலாசிரியர் அருண் பாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை, முகேஷ் முகமது, கீழக்கரை சம்சுதீன், நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த பாடல் குறித்து பாடலை எழுதியுள்ள அருண் பாரதி யூடியூப் கமெண்டில், வா சாமி பாடல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கான பாடலாகவும், கிராமத்து சிறுதெய்வங்களை கொண்டாடும் பாடலாகவும் எழுதியுள்ளேன் என சிவா சன் பிக்சர்ஸ் மற்றும் இமானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களும் இந்த பாடல் அருமையாக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த பாடலைப் பாடிய பார்வை திறனற்றவர்களை புகழ்ந்து, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இமானை பாராட்டியுள்ளனர்.
இந்த நிலையில், நவம்பர் முதல் திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து தீபாவளியை பண்டிகையையொட்டி, நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil