rajinikanth Apollo rajinikanth health : உடல்நலக் குறைவால் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவர் 1 வாரத்துக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஜினிகாந்த் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராகும்பட்சத்தில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு, அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து வந்த நிலையில், படக்குழுவில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் ரஜினியும் தன்னை ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த சூழலில் நேற்று (25.12.20) நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று மதியம் அறிக்கை வெளியிட்டது.
அதில், ``ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை, கொரோனா அறிகுறிகளும் இல்லை” என தெரிவிக்கப்பட்டது.
திடீரென்று ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் பலர் அவருக்காக வேண்டுதலில் இறங்கினர். ரஜினியின் நண்பர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்தினர். இந்நிலையில், தான் இன்று மீண்டும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்,”ரஜினிகாந்துக்கு இன்று மேலும் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரின் ரத்த அழுத்தம் நேற்றை விட தற்போது சீராக உள்ளது. அவருடைய ரத்த அழுத்தத்தை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். ” என்று தெரிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகும் வரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அப்போலோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ரஜினிகாந்த் டிசம்பவர் 25ம் தேதி கடுமையான ரத்த அழுத்தத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து அவரது உடல்நிலை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம் சீராக நிலையாக இருக்கிறது. அவர் நலமாக இருப்பதாக உணர்கிறார். அவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யபட்டிருக்கிறார்.
அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகான உடல்நிலையின் அடிப்படையில், ஏற்படும் ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் அவரது வயது காரணமாக கூடுதலாக மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடு முறைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது: 1. ஒரு வாரத்துக்கு முழுவதுமாக படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும். ரத்த அழுத்தம் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். 2. சிறிய அளவில் உடல் ரீதியான செயல்பாடு இருக்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இந்த அறிவுத்தல்களின் பேரில் அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு எந்த செயல்பாடுகளையும் தவிர்க்க வேண்டும். இவை மீறப்பட்டால், கோவிட் 19 தொற்று ஏற்படுவதற்கு ஆபத்து அதிகரிக்கும்” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.